நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்டிபிஐ. சார்பில் குடியுரிமை திருத்தசட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசினார், இதையடுத்து பா.ஜனதா கட்சியினர் கொடுத்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீசார் நெல்லை கண்ணன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நெல்லை கண்ணன் எந்த நேரத்திலும் போலீசாரால் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை உருவானது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நெல்லை கண்ணன்வீட்டை பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தினர். அப்போது நெல்லை கண்ணனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகம் ஆடப்பட்டது .
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் பா.ஜனதாவினர் சென்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து நெல்லை கண்ணனை மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவரை போலீசார், ஆம்புலன்சில் மதுரைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவர் தலைமறைவானர். மேலப்பாளையம் போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்தநிலையில் பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒருதனியார் விடுதியில் நெல்லை கண்ணன் அறை எடுத்து தங்கியிருப்பது பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அந்த விடுதியை சுற்றி வளைத்தனர்.
இதனை அறிந்த பாஜக.வினர் தனியார் விடுதி முன்பு ஒன்று திரண்டு நெல்லை கண்ணனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தநிலையில் அங்கு வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் அசம்பா விதங்களை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கபட்டனர்.
பின்னர் போலீசார் நெல்லை கண்ணனை கைதுசெய்து விடுதியின் பின்புறம் வழியாக அழைத்துசென்று காரில் ஏற்றினர். இதற்கிடையே நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து மேலப் பாளையம் போலீசார் பெரம்பலூருக்கு சென்றனர். அவர்களிடம் நெல்லை கண்ணனை பெரம்பலூர் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை மேலப்பாளையம் போலீசார் நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்தபிறகு நெல்லை கண்ணனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துகின்றனர். நெல்லை கண்ணன் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டிருந்ததால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.