கடந்த 25 ஆண்டுகளுக்குமுன்னர், காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றியது போல், சீக்கியர்களை வெளியேற்றுவதற்கு பஞ்சாபில் கலவரத்தைத்தூண்டிவிட பாகிஸ்தான் முயற்சிப்பதாக மக்களவையில் குற்றம்சாட்டப்பட்டது.

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற உடனடிக்கேள்வி நேரத்தின்போது பஞ்சாபில் சீக்கியர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஜெகதீஷ்கக்னேஜா அண்மையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். இச்சம்பவத்தால் மாநில அரசு பீதியடைந்துள்ளதால், மாநிலத்தில் பிரச்னையை உருவாக்க யாரோ தீயசக்திகள் முயற்சிப்பது போல் உள்ளதால் கூடுதல் துணை ராணுவப் படையினர் வேண்டும் என வலியுறுத்தியது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீர் பண்டிட்டுகளை பள்ளத்தாக்குப்பகுதியில் இருந்து வெளியேற்றியதுபோல், அங்கு உள்ள சீக்கியர்களை வெளியேற்ற பஞ்சாபில் பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயலுகிறது.எனவே, உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "நாளுக்குநாள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலைமை மோசமடைந்துவருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்துவெளியிட வேண்டும்' என்றார்.

நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளின் எல்லைகளின் அருகே கள்ள நோட்டுப் புழக்கம், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் ஆகியவை அதிகரித்துவருகின்றன என்றும் இதுகுறித்து தேசியப்புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாஜக எம்.பி. யோகி ஆதித்ய நாத் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply