அடல் ஜி என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஸ்ரீ கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் – கிருஷ்ண தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார் வாஜ்பாய். இவர் 1957ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் உறுப்பினராக நுழைந்தார். அதன்பிறகு, 5வது, 6வது, 7வது மக்களவைத் தேர்தலிலும், பிறகு 10வது, 11வது, 12வது மற்றும் 13வது மக்களவைத் தேர்தல்களிலும், 1962,1986 மாநிலங்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்தார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்களவைக்குப் போட்டியிட்டு 4 முறையும் வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையையும் இவர் படைத்துள்ளார். அதாவது, உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் இருந்து இவர் போட்டியிட்டுள்ளார்.

இந்த வகையில், மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்வாகியுள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மிகக் குறுகிய நாட்களே பொறுப்பில் இருந்தவர் என்ற பெயரையும் வாஜ்பாயி பெற்றுள்ளார். முதல் முறையாக இவர் 1996ம் ஆண்டு மே 16 – 31ம் தேதி வரை அதாவது 16 நாட்கள் மட்டுமே பிரதமராக பதவி வகித்தார். இரண்டாவது முறை 1998 மார்ச் 19 முதல் 2004 மே 13ம் தேதி வரை பிரதமராக பதவி வகித்தார்.

பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். தான் வகித்த பதவிக்கு மிகவும் பொருத்தமாக மாறக் கூடிய திறமை பெற்றவர். 

மாணவராக இருந்த வாஜ்பாயி, 1942ம் ஆண்டு வெள்ளையறே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து தனது முதல் சுதந்திரப் போராட்டத்தை வெளிப்படுத்தினார். 

பத்திரிகையாளராக பணியைத் தொடங்கிய வாஜ்பாய், அதிக நாட்கள் அப்பணியைத் தொடராமல், 1951ம் ஆண்டிலேயே தற்போது பாஜக என அழைக்கப்படும் பாரதிய ஜன சங் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

மிகச் சிறந்த கவிஞராகவும், இசை விரும்பியாகவும், சமையலில் நிபுணராகவும் வாஜ்பாயி விளங்கினார்.

****

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக வாக்குமூலம்

சர்ச்சை.. சுதந்தரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக வாஜ்பாய் அளித்த வாக்குமூலம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1942ம் ஆண்டு வெள்ளையேனே வெளியேறு போராட்டம் தீவிரமடைந்திருந்தது. ஆகஸ்ட் 27ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் லீலாதரன் தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் ஆக்ராவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள பத்தேஷ்வர் கிராமத்தில் வனத்துறை அலுவலகக் கட்டத்தை சூழ்ந்து கொண்டது. கட்டடித்தின் உச்சியில் ஏறிய இளைஞர்கள் அங்கு தேசியக் கொடியைப் பறக்க விட்டதுடன், உயரே பறக்கிறது எங்கள் கொடி என்ற பாடலை உணர்ச்சிகரமாகப் பாடுகிறார்கள்.

உடனடியாக களத்தல் இறங்கிய காவல்துறை அங்கிருக்கும் இளைஞர்களைக் கைது செய்கிறது. லீலாதரன் தலைமறைவாக இருந்து பிறகு கைதாகிறார். சுமார் 37 பேர் மீது வழக்குப் பாய்கிறது. கைதான இளைஞர்களில் இருவர் அரசு அதிகாரியின் பிள்ளைகள். அவர்கள் லீலாதரனுக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை அளித்து சிறை நடவடிக்கையில் இருந்து தப்புகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் வாஜ்பாயி.

அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களை தாம் நேரில் பார்த்ததாக நீதிபதி முன்பு வாஜ்பாய் வாக்குமூலம் அளித்ததோடு, உருதுவில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையெழுத்தும் இட்டிருந்தார்.

இந்த சம்பவம் நடந்து சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கில ஊடகம், அந்த வாக்குமூலத்தை மொழிபெயர்த்து வெளியிட்ட போது இது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இது பற்றி வாஜ்பாயிடம் கேட்டதற்கு, எனக்கு அப்போது உருது படிக்கத் தெரியாது என்று விளக்கம் அளித்திருந்தார்.

அந்த வாக்குமூலத்தில், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தாம் ஒரு விடுதலைப் போராட்ட வீரராக பங்கேற்கவில்லை என்றும், போராட்டத்தை வெளியில் இருந்து பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், போராட்டக்காரர்களை பின்தொடர்ந்து சென்றேனே தவிர, போராட்டத்தில் பங்கேற்கவில்லை. நான் யார் மீதும் பழிபோடவில்லை. பார்த்த விஷயங்களை மட்டுமே சொன்னேன் என்றும் கூறியிருந்தார்.

****

இஸ்லாமுக்கு இரண்டு முகம் – 2002 ஏப்ரல் 12

பிரதமராக பதவியேற்ற அடல் பிஹாரி வாஜ்பாய், பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், இஸ்லாம் மதத்துக்கு இரட்டை முகம். ஒன்று, சகிப்புத் தன்மையையும், மனித உணர்வுகளை மதிக்கும் குணத்தையும் கற்றுத் தருவது. மற்றொன்று பயங்கரவாதத்தின் மீதான ஈர்ப்பு, அங்கு சகிப்புத் தன்மைக்கு இடமில்லை என்று கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு

சுமார் 17 ஆண்டுகள்விசாரணை நடத்திய லிபெரான் வாஜ்பாயிக்கு சம்மன் அனுப்பவேயில்லை.

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட வெறும் 12 மணி நேரங்கள் இருந்த நிலையில், லக்னௌவில் நடைபெற்ற பேரணியில் பேசிய வாஜ்பாய், மிகக் கூர்மையான கற்கள் காத்திருக்கின்றன என்று கூறினார். இது பாபர் மசூதி இடிப்பை மறைமுகமாகக் கூறியதாகவே இன்றவளவும் கருதப்படுகிறது.

ஆனால் லிபெரான் அறிக்கையில் வாஜ்பாய் பற்றி கூறியிருப்பது என்னவென்றால், பாபர் மசூதி இடிப்பின் போது வாஜ்பாயி அயோத்தியாவில் இல்லை. சம்பவத்தின் போது சில முக்கியத் தலைவர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இதனால் வாஜ்பாயியை விட்டுவிட முடியாது. பாபர் மசூதி இடிப்பு தன்னிச்சையானது அல்ல, திட்டமிடப்பட்டதே. சம்பவத்தை மறைமுகமாக மிகப் பெரிய தலைவர்கள் அத்வானி, ஜோஷி, வாஜ்பாயி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அதே நீதிபதி லிபெரான், வாஜ்பாயிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியவர், ஆனால், 17 ஆண்டு கால விசாரணை காலத்தில் ஒரு முறை கூட வாஜ்பாயிக்கு சம்மன் அனுப்பவில்லை. யாரேனும் ஒருவர் லிபெரான் அறிக்கையை குறை கூற வேண்டும் என்றால் இந்த ஒரு காரணம் போதும்.

லாகூர் ஒப்பந்தம்

1999ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தே இந்திய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவது, உறவில் நிலைத்தன்மை, தெற்காசியாவின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியதாக லாகூர் ஒப்பந்தம் அமைந்திருந்தது.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பது, ஏவுகணைச் சோதனைகளை முன்கூட்டியே அறிவிப்பது உள்ளிட்ட விஷயங்களும் அடங்கும்.

கார்கில் போர்

1999ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான கார்கிலில் நடந்த கடும் போர், வாஜ்பாயி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர் பற்றி ஓராண்டுக்கு முன்பே, இந்திய புலனாய்வு அமைப்புகள், வாஜ்பாய் அரசை எச்சரித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே போர் நடைபெறக் காரணம் என்ற குற்றச்சாட்டும், மத்திய அரசு ஒரு நடவடிக்கையையாவது மேற்கொண்டிருந்தால் கார்கில் போர் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதே குற்றாட்டு.

ஆனால் கார்கில் போரில் இந்திய ராணுவம் கடும் போராட்டத்துக்குப் பின் வெற்றி பெற்று, ராணுவ வலிமையை உலகுக்குப் பறைசாற்றி வெற்றிக் கோஷத்தை பதிவு செய்தது.

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட வாஜ்பாய்

கண்களில் இருந்து உருண்டோடி முகத்தில் வழிந்த கண்ணீர்
1999ம் ஆண்டு 13 மாதங்கள் வாஜ்பாயி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி நடத்தி வந்த நிலையில், மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1999ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் பாஜக கூட்டணி 269 வாக்குகளைப் பெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் 270 வாக்குகளைப் பெற்றது. வாக்கெடுப்பின் நிறைவில் முடிவை அறிவித்த அவைத் தலைவர் ஜி.எம்.சி. பாலயோகி, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாஜ்பாயி தோற்கடிக்கப்பட்டார் என்று அறிவித்தார்.

மிகவும் தளர்ந்த நடையோடு மக்களவை வளாகத்தை விட்டு வெளியேறி தனது அறைக்குச் சென்றார். அவரது பின்னால் சென்ற அவரது உதவியாளர் கூறுகையில், அந்த அறைக்குள் நான் நுழைந்தபோது, ஏற்கனவே ஏராளமான மூத்த தலைவர்கள் அந்த அறையில் நிரம்பியிருந்தனர். அங்கே கண்ணீர் விட்டு அழுத வாஜ்பாய், வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்திலா தோல்வி அடைந்தேன் என்று கேட்டார். அப்போது அவரது கண்களில் இருந்து திரண்ட கண்ணீர் முகத்தில் உருண்டோடியது.

அவருக்கு நிகராக, மூத்த தலைவர்கள் அத்வானி, பிரமோத் மகாஜன் ஆகியோரும் கவலையில் இருந்தனர். அதுதான் முதலும் கடைசியுமாக, உடைந்து போயிருந்த வாஜ்பாயை நான் பார்த்தது என்று கூறி முடித்திருந்தார்.

நன்றி தினமணி

Leave a Reply