பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

நாடு முழுவதும் ஒரே குரலில் பேசவேண்டிய வேளையில் 21 எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக நாம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரத்தை வெளியிடவேண்டும் என இவர்கள் கேட்கிறார்கள். இது பாகிஸ்தானுக்கு வசதியாக போய்விடுகிறது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.

பாகிஸ்தானுக்கு ஏற்றகுரலில் இங்குள்ள எதிர்க்கட்சியினர் பேசுவதால் இவர்களின் கருத்தை கேடயமாக பயன்படுத்தி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்னும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.

முஸ்லிம் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதுபோன்ற சித்தரிப்பிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், எங் கள் ஆட்சியில் தான் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மத்தியமந்திரி சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் பங்கேற்றது பெருமைக்குரிய விஷயமாகும்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு இந்தகவுரவம் கிடைத்துள்ளது. மத்தியில் முன்னர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது இந்தியாவின் குரல் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு கேட்காமலபோனது ஏன்?

சமீபத்தில் இந்தியா வந்திருந்த சவுதி அரேபியா இளவரசர் அந்நாட்டுக்கு ஹஜ்யாத்திரை செல்லும் இந்திய முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை 2 லட்சமாக அதிகரித்து தந்துள்ளார்.

அந்நாட்டின் சட்டதிட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறுகளை செய்து அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுதலை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த கோரிக்கையை நான் சவுதி இளவரசரிடம் முன்வைத்த போது சற்று அவகாசம் தருமாறு கேட்டார்.

அன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தின் போது, என்னை இனிப்பு சாப்பிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நான் எதற்கு? என்று வியந்தபோது, 850 இந்தியர்களை விடுதலைசெய்ய சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்படி நாட்டிலுள்ள அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும் இந்த அரசு பாடுபட்டுவருகிறது என்பதை இங்கே கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஊழலையும் ஏழ்மையையும் ஒழிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுவரும் என்னை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் என் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நாட்டின் காவல் காரனான என்னை வசைபாடுவதில் எதிர்க் கட்சிகளுக்கு இடையில் போட்டாப் போட்டி நிலவுகிறது. ஆனால், இவர்களை மீண்டுமொரு முறை தண்டித்து, சரியான பாடம் கற்பிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply