பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும், அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கர வாதம் என்ற கொடூரச் செயலை எதிர்த்து உலக நாடுகளுடன் இணைந்து உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றும் இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், இந்தியா – ரஷ்யா நாடுகள் சார்பில் இணைந்து கூட்டறிக்கை வெளியிடப் பட்டது. பயங்கரவாத பிரச்னையில் இரட்டை நிலைப்பாட்டை எந்தவொரு நாடும் கொண்டிருக்க கூடாது. தீவிரவாத அமைப்புகளின் நெட்வொர்க்கை முற்றிலுமாக அழிப்பதுடன், அந்த அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளைக் கண்டிப் பதற்கான முயற்சிகளையும் எடுக்கவேண்டும். 

பயங்கரவாதக் கொள்கை, அது தொடர்பான பிரசாரம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பிரசாரங்களையும் முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும். சர்வதேசளவில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த மாநாட்டை ஐ.நா உடனடியாக நடத்தவேண்டும். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும். ஆப்கானிஸ்தான் தலைமையிலான அமைதி மற்றும் கூட்டுறவு முயற்சிகளை இந்தியாவும் ரஷ்யாவும் ஆதரிப்பது என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை, கல்வி மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, தரையிலிருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய எஸ் – 400 ஏவுகணைகளை இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தமும் இதில் அடங்கும். வர்த்தகம், ரயில்வே, அணு சக்தி மற்றும் குறு, சிறு தொழில்துறையில் இதர ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.