பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத ஊடுருவலை முற்றிலும் தடுப் பதற்காக, இந்தியாவின் மேற்கு எல்லையில் சுமார் 2,900 கி.மீ. தொலைவுக்கு அதி நவீன தொழில் நுட்பத்துடன் பாதுகாப்பு அளிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 இந்த பாதுகாப்பு வசதிகளால், பதான்கோட் போன்ற பயங்கரவாத தாக்குதல்களையும், கடத்தல் களையும் முற்றிலுமாகத் தடுக்க முடியும்.


 இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், திங்கள் கிழமை கூறியதாவது:
 பாகிஸ்தான் எல்லை பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி), இரவு காண் கருவிகள், கண்காணிப்பு ராடார் கருவிகள், பூமிக்கு அடியில் நிகழ்வதை உணரும்கருவிகள், லேசர் தடுப்புகள் ஆகிய 5 விதமான அதிநவீன கருவிகளுடன் ஒருங்கிணைந்த எல்லை பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்படும்.

இந்தக் கருவிகள் 24 மணி நேரமும் செயல்படும் என்பதால், எல்லை பகுதியில் ஆள்கள் நடமாட்டத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.  ஜம்மு-காஷ்மீரில் இருந்து குஜராத் மாநிலம்வரை பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஆற்று வழித்தடங்கள், மலைப் பகுதிகள் என 130 இடங்கள் வேலிகள் அமைக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலும் அந்த பகுதிகளில் இருந்துதான் ஊடுருவல் காரர்கள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். அந்த இடங்களில் லேசர் தடுப்புகள் அமைப்பதால், ஊடுருவல் காரர்களின் அத்துமீறலைக் கண்டுபிடித்துவிட முடியும்.


 எல்லை பகுதியில் அமைக்கப்படவுள்ள ராடார்கருவியும், சிசிடிவி கேமராவும், 24 மணி நேரமும் எல்லா கோணங்களிலும் சுழன்று படம்பிடிக்கும் தன்மை கொண்டதால், ஊடுருவல் காரர்களுக்கு இந்தியத் தரப்பில் இருந்து உதவி செய்வோரை பாதுகாப்பு படையினர் எளிதில் பிடித்துவிடலாம்.


 சோதனை முயற்சியாக, ஜம்முகாஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 5 கி.மீ. தொலைவுக்கு இந்த கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியாவின் மேற்கு எல்லையில் சுமார் 2,900 கி.மீ. தொலைவுக்கு, ஒருங்கி ணைந்த எல்லை பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.

Leave a Reply