பண மதிப்பு நீக்கநடவடிக்கையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டபாதிப்புகளுக்கு உதவும் விதமாக நவம்பர் டிசம்பர் மாதங்களுக்கான பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் பாதிப்புகளை குறைக்கும் விதமாக பயிர்கடன் வட்டியை தள்ளுபடி செய்யலாம் என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 2016-ம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்கான பயிர்க்கடன் வட்டி ரூ.660.50 கோடி தள்ளுபடி செய்கிறது. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.400 கோடி கடன்வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது. பண மதிப்பு நீக்கம் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மீள விவசாயிகளுக்கு இது வழிவகை செய்யும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் கூறியதாவது:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய குறுகிய கால பயிர்க்கடனுக்கான நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான வட்டி ரூ. 660.50 கோடியை தள்ளுபடிசெய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

நடப்பு நிதியாண்டின் குறுகியகால கடனுக்கன வட்டி மானியம் அளிக்கவும், விவசாயிகளுக்கு மறுகடன் வழங்குவதற்கு ஏற்பவும் ரூ.1060.50 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபிறகு நவம்பர் டிசம்பர் மாதங்களில் பயிர் கடன் செலுத்திய விவசாயிகளுக்கு நேரடி பண பரிமாற்றம் மூலம் அவர்களது வங்கிகணக்கில் வட்டி தொகை செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2016-17 நிதியாண்டில் மட்டும் இதுவரையில் 15,000 கோடி ரூபாய் வட்டிமானிய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரசு குறுகியகால பயிர்கடன் ரூ.3 லட்சம் கோடியை 7 சதவீத ஆண்டுவட்டியில் அளிக்கிறது. முறையாக திருப்பிசெலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத ஊக்க்கதொகையும் வழங்குகிறது. மத்திய அரசு ரூ.9 லட்சம் கோடிக்கு பயிர் கடன் இலக்குவைத்துள்ளது. அதில் செப்டம்பர் மாதம் வரை ரூ.7.56 லட்சம் கோடியை அளித்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்

Leave a Reply