மறைந்த பத்திரிகையாளர் சோ. ராமசாமிக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பலதுறைகளில் பன்முகத் தன்மைகொண்ட பண்பாளர் சோ ராமாசாமி (82) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று அதிகாலை 3.58 மணிக்கு காலமானார்.
அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். ’சோ’ மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் . அதில்,சோ குறித்த தகவல்களை பதிவிட்டார். ‘பன்முகத் திறமை வாய்ந்தவர், உன்னதமான அறிவுஜீவி, மிகச்சிறந்த தேசியவாதி, யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலாக கருத்து கூறுபவர், மரியாதைக்குரியவர், அபிமானத்துக்கு உரியவர்’ என பல விதமாக சோவை பிரதமர் மோடி புகழ்ந்தார்.

அதோடு, ‘மகா துணிச்சல் காரரான சோ என்னை மரணவியாபாரி என அறிமுகப்படுத்தி வைத்தார்’ எனக் கூறி, வீடியோ இணைப்பு ஒன்றையும் இணைத்து, அனைவரும் பாருங்கள் என, பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

குஜராத் கலவரங்களோடு மோடியை தொடர்புபடுத்தி அவரை, மரணவியாபாரி என, காங்கிரஸ் தலைவர் சோனியா முந்தைய காலங்களில் விமர்சித்தார். எனினும், குஜராத் முதல்வராக 3-வது முறை மோடி பொறுப்பேற்றபோது, நடந்த விழா ஒன்றில் சோ கலந்துகொண்டு பேசினார்.

அப்போது சோனியாவை நையாண்டி செய்யும் வகையில், மோடியை சுட்டிக் காட்டி, ‘இப்போது நான் மரண வியாபாரியை மேடைக்கு அழைக்கிறேன்’ எனக்கூறி சற்று இடைவெளி விட்டு,

‘அதாவது, தீவிரவாதத்துக்கு சாவுமணி அடிப்பவர், ஊழலுக்கு எதிரான மரணவியாபாரி, திறமையற்ற அரசு நிர்வாகத்துக்கு, அதிகாரிகளின் பொறுப்பற்ற மெத்தனத்துக்கு, வறுமைக்கு, அறியாமைக்கு, இருள் மற்றும் இயலாமைக்கு மரணத்தை அளிக்கும்வியாபாரி’ எனக் கூறி, சோனியாவின் குற்றச்சாட்டை புகழாரமாக மாற்றினார் சோ.

இதற்கு பதில்அளித்த மோடி, 1975-77 அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து நான் ராமசாமிக்கு ரசிகன். சோ உண்மையான ஜனநாயகவாதி. என் தமிழகநண்பர்கள் அவரை ராஜகுரு என்பார்கள். 3-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்கும் எவரும், ஏற்கெனவே செய்ததை தொடர்ந்தால் போதும் என நினைப்பார்கள். ஆனால், சோவின் பேச்சைக்கேட்ட பிறகு என்னால் ஓய்வெடுக்க முடியாது எனத் தோன்றுகிறது’ என்றார்.

சோ அளவுக்கு எனக்கு நாவன்மை இல்லை என்றாலும் என்னால் முடிந்த வரை அவருக்கு பதில் உரைத்தேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply