சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக., அதிமுக. என்கிற திராவிட கட்சிகளை அகற்றவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

அதற்காகத்தான் பா.ஜ.க மாற்றாக, வலுவான கூட்டணி அமைய முயற்சிசெய்து இருக்கிறோம். அண்ணன் வைகோ தலைமையில் இருக்கும் மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்து இருக்கிறார்.

இந்தகூட்டணி அமைந்ததின் நோக்கம் திமுக., அதிமுக. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சிக்குவர வேண்டும் என்பதற்காகவே அந்தகூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக மக்களின் நலனுக்கு, எதிர்பா ர்ப்புக்கு விரோதமாக தான் இந்தகூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது.

இன்று பவுர்ணமி நாள். முழுமையான நாள். தேய்பிறைகாலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. பா.ஜ.க.,வில் தே.மு.தி.க. வரவில்லை என்பதால் நாங்கள் தனித்து விடப்படவில்லை.

பா.ஜனதா வலுவாகத்தான் இருக்கிறது. நேற்றுமுன்தினம் கூட எங்கள் மாநில தலைவர் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது.

மக்கள் நலக் கூட்டணி – தே.மு.தி.க. கூட்டணியால் எந்த பயனும் இல்லை.  விஜயகாந்தை முதல்– அமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள். இந்த கூட்டணி வெற்றிபெறாது என்றாலும் கூட முதல்–அமைச்சராக விஜயகாந்த் வர வாய்ப்பே இல்லை என்றாலும் கூட என்னுடைய அருமை சகோதரர் என்பதால் முதல்– அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்துக்கு எனது வாழ்த்துக்கள்.

பா.ஜ.க ஏற்கனவே முடிவு எடுத்து தேர்தலுக்காக பணிகளை ஆரம்பித்துவிட்டோம். தி.மு.க., அ.தி.மு.க. பெரிய கட்சிகள் என்றால் ஏன் கூட்டணிக்கு மற்ற கட்சிக்களுக்காக காத்து இருக்கவேண்டும். 5 முறை முதல்–அமைச்சராக இருந்த கலைஞர் பழம் கனிந்து வருகிறது என்றார். பழம் கனிந்து பாழாய் போய் விட்டது.

எந்த கட்சியும் பெரிய கட்சி கிடையாது. மக்கள் தான் பெரிய கட்சி. 60 சதவீத மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

தே.மு.தி.க. கூட்டணிக்கு வரவில்லை என்பதால் பா.ஜனதா தனித்து விடவில்லை. அப்படியென்றால் அ.தி.மு.க.வும், தி.மு.க. வும் தனித்து விடப்பட்டு இருக்கிறதா? முன்பு ஒற்றை காளை வண்டியாக இருந்தது. தற்போது இரண்டை காளை வண்டியாக இருக்கிறது.

ஆனால் வண்டியை யார் ஓட்டுவது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply