அளவுக்கு மீறி னால் அமிர்த மும் நஞ்சு என்று முன்னோர்கள் கூறுவர். அதை நமது இன்றைய அரசியல் வாதிகள் உண்மையென நிரூபித்துள்ளனர்.

நமது ஜனநாயகம் நமக்கு அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல்வாதிகள் மனம்போன போக்கில் அனைத்து விஷயங்களையும் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு போன்ற விஷயங்களையும் விமர்சிப்பது வேதனைதருவதாக உள்ளது. நம்முடைய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் வேளையில் அதற்கு தக்கபதிலடி கொடுக்கும் வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதி களின் முகாம்களை நமது ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் துவம்சம்செய்தது. இதுவரை மந்தமான நிலையில் இருந்த மத்திய அரசு துணிச்சலாக இந்த பதிலடி கொடுத்ததை நாட்டுப்பற்றுடைய அனைத்து மக்களும் கொண்டாடினர்; இதுபோன்று உடனுக்குடன் பதிலடி கொடுத்து பாகிஸ்தானை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். உலகநாடுகளும் இந்த அதிரடி தாக்குதலை விமர்சிக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்க ஒருசில அரைவேக் காட்டு அரசியல்வாதிகள் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகம்பாவ போக்கில், இந்த அதிரடிதாக்குதல் போலியானதென்றும் அதை உண்மையென நிரூபிக்க வீடியோ ஆதாரங்கள் தரப்படவேண்டும் என்றும் கூறி நமது ராணுவத்தைக் கொச்சைபடுத்தி உள்ளனர். உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம்கூட இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார். சிதம்பரம் இவ்வாறு நாலாந்திர அரசியல்வாதி அளவுக்கு தாழ்ந்துபோவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நமது பிரதமரின் துணிச்சலான நடவடிக்கையை ஏற்கும் மனோபாவம் தனக்குஇல்லை என்பது சிதம்பரம் தனது இந்த விமர்சனத்தின் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார். அதுவும் இந்த தாக்குதலை நம்பவில்லை என நேரடியாக கூறாமல், மக்கள் வீடியோ ஆதாரங்களை எதிர்பார்ப் பார்கள் என்று மக்கள் மீது பழி போட்டு கோழைத்தனமாக விமர்சித்துள்ளார். தேசபக்தி மிக்க தமிழகமக்கள் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தேர்தல்களில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இந்தமாதிரி வீடியோ ஆதாரங்கள் தருவதால் நமது தாக்குதல் வியூகத்தை பாகிஸ்தானுக்கு அம்பலப்படுத்துவது ஆகாதா? நம்முடைய எதிரிநாட்டின் மீதான ராணுவ தாக்குதலை எப்படி பகிரங்கமாக விளக்க முடியும்? இந்த அதிரடி தாக்குதலை பொய்யானது என்று பாகிஸ்தான் கூறிவருகிறது. ஆனால் கார்கில் ஊடுருவல், காஷ்மீர் மற்றும் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உட்பட 20க்கும் மேற்பட்ட சம்பவங்களில் எதைத்தான் உண்மையென்று பாகிஸ்தானியர் ஒப்புக் கொண்டிருக் கின்றனர்? தற்போது நடந்த யூரிதாக்குதலில் இந்திய ராணுவம் தங்களுடைய வீரர்களைக் கொன்றுவிட்டதாக பாகிஸ்தானியர் கூறுகின்றனர்.இந்த கதையை நீங்கள் நம்புகிறீர்களா? பொய்யிலே பிறந்து பொய்யிலேவாழும் பாகிஸ்தானியர் கூறுவதை சிதம்பரமும் கெஜ்ரிவாலும் நம்புகிறார்களா? நமது ராணுவ தலைவர்கள் பொய்யர்களா? அவர்கள் உங்களைப்போல் நாலாந்தர அரசியல்வாதிகளா?

ஏராளமான உளவு செயற்கை கோள்களை வைத்துள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும்கூட இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளன. பெரும் பாலான மேலை நாட்டு ஊடகங்களும் இந்த தாக்குதலை விமர்சிக்கவில்லை; நமது இதர அண்டைநாடுகளும் எந்த சந்தேகத்தையும் எழுப்பவில்லை. நிலைமை இப்படி இருக்க, வீடியோ ஆதாரம் தேவை என்று கேட்க நீங்கள்யார்? நாங்களும் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்தி இருப்பதாக காங்கிரஸ் தற்போது கூறுகிறது. அந்த தாக்குதல்களுக்கான ஆதாரங்களை காங்கிரஸ் எப்போதாவது கொடுத்ததுண்டா? அல்லது தற்போதாவது தரத்தயாராக இருக்கிறதா? பிரதமர் தற்போது காட்டியுள்ள துணிச்சலை ஏற்கும் மனப்பக்குவம் காங்கிரசாருக்கு இல்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன.

சர்ஜிகல் ஸ்டிரைக் தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டிருப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். அவர் இவ்வாறு கருத்தை உதிர்த்ததும் அதற்காகவே காத்திருந்ததுபோல், பாகிஸ்தானிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கை பொய் என கூறிவந்த பாகிஸ்தானுக்கு கெஜ்ரிவாலின் இந்த புலம்பல் அல்வா மாதிரியாகி விட்டது. பாகிஸ்தானிய பத்திரிகைகள் தங்களுடைய தலைப்புச் செய்தியாக இந்த புலம்பலை வெளியிட்டு மகிழ்ந்தன. நமது பிரதமர் மற்றும் அரசின் துணிச்சலை ஜீரணித்துக் கொள்ள முடியாத இத்தகைய சில அரைவேக்காடுகள், நமது எதிரியின் ஆசைக்கு இரை போடுவது போல் நடந்து கொள்வது கேவலமாக உள்ளது. இதற்கிடையில் கெஜ்ரிவால் தனது அறை கூவலை வழக்கமானபாணியில் மறுத்து பல்டி அடித்துள்ளார். தற்போது அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், நரேந்திரமோடிக்கு எனது சல்யூட். பாகிஸ்தான் பொய்யான பிரசாரம் செய்துவருகிறது; சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்தது என்பதை நாம் நம்புகிறோம்; ஆனால் அவ்வாறு தாக்குதல் நடத்தபடவில்லை என பாகிஸ்தான் பிரசாரம் செய்துவருகிறது. பாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் வீடியோ ஆதாரங்களை நமது மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றுதான் நான் கூறினேன். பிரதமருக்கு உறுதுணையாக இருந்து அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

நன்றி தினமலர்

Leave a Reply

Your email address will not be published.