பாகிஸ்தான் ராணுவத்தாக்குதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப் பட்டதற்கு தாங்கள் காரணமல்ல என்ற பாகிஸ்தானின் மறுப்பு நம்பத்தகுந்ததாக இல்லை’ என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். 

இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்திய ராணுவவீரர்கள் இருவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப் பட்டிருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்த இந்தியா, தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால், பாகிஸ்தான் தனக்கு இதில் எந்தசம்பந்தமும் இல்லை என மறுப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண்ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மறுப்பில் எந்த நம்பகத் தன்மையும் இல்லை என ஜெட்லி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நடந்த தீவிரவாத தாக்குதலும், இந்திய ராணுவவீரர்களின் மரணமும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய ராணுவவீரர்களுக்கு நிகழ்ந்த கொடுமையான மரணத்துக்கு பாகிஸ்தானின் பங்கேற்பு இல்லாமல் இருக்காது’ எனக்கூறியுள்ளார்.

நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்புள்ளது என்பதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்திய ராணுவத்திடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப்படையின் பதிலடி விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply