பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று ( 5 ம் தேதி ) பெஷாவரில் சீக்கியஇளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தசம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தானின், நங்கனா சாஹிப்பில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுதலமான குருத்வாரா மீது அடையாளம்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தசம்பவம், அங்கு வசிக்கும் சீக்கியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெஷாவரில் சீக்கியஇளைஞர் ஒருவர் , மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். பெஷாவரின் சம்கனி போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில், அந்தஇளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப் பட்டது. பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இளைஞர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சங்லாமாவட்டத்தை சேர்ந்த ரவுந்தர்சிங் என்பதும், திருமணத்திற்காக பொருட்கள் வாங்க பெஷாவர் வந்ததும் தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கொலை செய்து விட்டு, அவரின் மொபைல் மூலமாகவே குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தானில், சீக்கிய பெண்ணை கடத்தி, கட்டாயமாக மதமாற்றம்செய்து திருமணம் செய்து வைத்த சம்பவம், குருத்வாராமீது தாக்குதல், தற்போது சீக்கிய இளைஞர் பெஷாவரில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு இந்தியா கடும்கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து, நீதி முன் நிறுத்துவதுடன், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Comments are closed.