ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவ துணைத்தளபதி ரண்வீர் சிங் தெரிவித்தார்.


ஜம்மு-காஷ்மீரின் உரிபகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கர வாதிகள் ஞாயிற்றுக் கிழமை நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தினரின் பதில்தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


இந்த பயங்கரவாதத்தாக்குதல் சம்பவம் குறித்து குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை சந்தித்து விளக்கமளித்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் ஆகியோருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.


மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய ராணுவத் துணைத்தளபதி ரண்வீர் சிங் கூறியதாவது:
இந்திய எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுபகுதிகளில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை இந்தக்கூட்டத்தில் எடுத்துக் கூறினோம். அவற்றை சரிசெய்யும் முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


உரி பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சில பொருள்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்தத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே தீர வேண்டும். பாகிஸ்தானுக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார் ரண்வீர் சிங்.

Leave a Reply