காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்றவாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்தகொடூர தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.

பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்களும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இன்று மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி புல்வாமா தாக்குதல் குறித்து ஒருசில கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது 40 சி.ஆர்.பி.எப் தியாகிகளை இன்று நினைவில் கொள்கிறோம். சரி இதை கேட்போம் : 1. இந்த தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார்? 2. தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன? 3. தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் பொறுப் பேற்றது யார்? என ராகுல் காந்தி பதிவிட்டார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்தது. இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ‘புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நாடுமரியாதை செலுத்தும்போது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் அனுதாபியான ராகுல்காந்தி, அரசாங்கத்தை மட்டுமல்ல, பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து விமர்சிக்கிறார். உண்மையான குற்றவாளியான பாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கேட்கமாட்டார். அவமானம்’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் கேபினட் மந்திரியான (பாஜக) சையத் ஷாநவாஸ் உசேன் ‘ராகுல் காந்தி சி.ஆர்.பி.எப் வீரர்களை அவமதித்துவிட்டார். ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துக்கள் சர்வதேச அரங்குகளில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ள உதவுகின்றன’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.