தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புவதாக ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி பாஜகவிற்கு தூது அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தனிப் பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவார் என்று கூறப்பட்டு வருகிறது. அதேசமயம் தனிப் பெரும்பான்மை கிடைக்காது பாஜக கூட்டணி அரசை அமைக்கும் சூழல்தான் உருவாகும் என்று சிலகணிப்புகள் கூறுகின்றன. இதனால் பாஜக மேலிடம் அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் செய்துவருகிறது.

குறிப்பாக கடந்த காலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைக்க அமித்ஷா வியூகம்வகுத்து வருகிறார். அந்த அடிப்படையில் ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.

 

கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி இருந்து வரும் நிலையில் ஒடிசாவை ஆட்சி செய்துவரும் பிஜு ஜனதாதளம் பெரிய அளவில் நலத்திட்டங்களை மாநிலத்திற்குக் கொண்டுவர முடியவில்லை.

 

எனவே இந்தமுறை மத்தியில் அமையும் அரசில் அங்கம் வகித்து ஒடிசாவை முன்னேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற முடிவெடுத்துள்ளதாக பிஜு ஜனதாதளம் தலைவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் ஒடிசாவிற்கு சிறப்புஅந்தஸ்து மற்றும் ஃபானிப்புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி ஆகிய வாக்குறுதிகளை பாஜக அளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிஜூ ஜனதா தளம் கூட்டணியில் இணையும் என்கிறார்கள்.

இதேபோல்  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிஅமையும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்தும் மத்தியில் அமைச்சர்கள் இல்லாததால் போதுமான திட்டங்களை மாநிலத்தில் அமல்படுத்த முடிய வில்லை என்று தெலுங்கானா ராஷ்டிரியசமிதி தலைவர் சந்திரசேகரராவ் கருதுகிறார். எனவே அவரும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக்கூடும் என்கிறார்கள்.