விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் விசாரித்தார்.

பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் ராஜுலு, மாநில துணைத் தலைவர் சுரேந்திரன் ஆகியோர் கடந்த 27-ம் தேதி இரவு மதுரையிலிருந்து காரில் வந்துகொண்டிருந்தனர். துவரங் குறிச்சி அருகே புழுதி பட்டி என்ற இடத்தில் ஒரு லாரி மீது கார்மோதியது.

இதில் படுகாயமடைந்த மோகன் ராஜுலு, சுரேந்தர், தனி பாதுகாவலர் பாண்டியன், கார்டிரைவர் விவேக் ஆகியோர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் மோகன் ராஜுலு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதா கிருஷ்ணன், பிரகாஷ்ஜவடேகர், பாஜக தேசியச்செயலாளர் முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மோகன் ராஜுலுவைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று மதியம் திருச்சி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திடீரென தனியார் மருத்துவமனைக்கு சென்று மோகன்ராஜுலு, சுரேந்திரன் ஆகியோரைச் சந்தித்து நலம்விசாரித்தார். அப்போது, விரைவில் குணமடைய கடவுளிடம் வேண்டிக் கொள்வதாக விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.

Leave a Reply