அரவக் குறிச்சி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் மற்றும் முகவர்களை அனுமதிக்காமல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது ஜனநாயகமரபுகளை மீறியசெயல் எங்கள் வேட்பாளர் மற்றும் முகவர்களை அனுமதித்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனுஅளித்த பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
 .

அரவக் குறிச்சி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கரூர் குமாரசாமி பொறியியல்கல்லூரியில் நடைபெற்றது. இங்கு முகவர்களுக்கு போதிய இடவசதி இல்லை என்று கூறி பாஜக , தேமுதிக வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப் படவில்லை. . இதனைக்கண்டித்து சாலையில் அமர்ந்து பாஜக வேட்பாளர் பிரபு, தேமுதிக வேட்பாளர் முத்து உள்பட 36 பேர் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.


இந்நிலையில், அரவக் குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில்சந்தித்து புகார்மனு அளித்தார். இன்று காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அரைமணி நேர சந்திப்பிற்கு பின்னர், வெளியே வந்த தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பிஜேபி, தேமுதிக வேட்பாளர் மற்றும் முகவர்களை அனுமதிக்காமல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. அந்தத்தொகுதியில் 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும், அவர்களின் முகவருக்கும் அங்கு போதிய இட வசதி செய்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிசெய்யாமல், அவர்களை வெளியேற்றிவிட்டு, அதற்காக போராடியவர்களை கைது செய்துவிட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அங்கு எங்கள் வேட்பாளரையும், முகவர்களையும் அனுமதித்து வாக்கு எண்ணிக்கையை முதலில் இருந்து நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.


அங்குள்ள நடைமுறை சிக்கல்களை தேர்தல் அதிகாரி எடுத்துக்கூறினார். மேலும், வீடியோ பதிவுகளையும் காண்பிப்பதாக கூறினார். இதில் எங்கள் வேட்பாளருக்கு திருப்தி ஏற்பட்டால்மட்டுமே அதனை நாங்கள் ஏற்போம். இல்லையெனில், அனுமதி மறுக்கப்பட்ட வேட்பாளர்களையும், முகவர்களையும் அனுமதித்து அங்கு மறுவாக்கு எண்ணிக்கையைத் தொடரவேண்டும். இல்லையெனில், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடருவோம்.

இடைத்தேர்தல் எப்படி நடைபெறும் என்பது தெரிந்தும், அதனை எதிர்த்து போராடு வதற்காகவும், எங்களுக்கான வாக்குகளை நாங்கள் பெறவேண்டும் என்பதற்காகவும் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். எங்களுக்கான வாக்குகளை நாங்கள் பெறமுடியாத அளவிற்கு அங்கு பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. மூன்று தொகுதியிலும் நாங்கள் மூன்றாம் இடம்பெற்றிருக்கிறோம். அங்கு பணப்படை செயல்படாமல் இருந்தால் நாங்கள் முதலிடம் பிடித்திருப்போம்.   இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply