முப்பது ஆண்டு களுக்கும் மேலாக பாஜக.,வுடன் நகமும், சதையுமாக இருந்து வந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்குமார்.

1959-ம் ஆண்டு, ஜுலை 22 இல் பெங்களூருவில் பிறந்த அனந்த குமார், கே.எஸ். கலைக் கல்லூரி மற்றும் ஜெ.எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர்.

இளமைப் பருவம் தொட்டே அரசியல் கண்ணோட்டம் கொண்டவர், ஆர்.எஸ். எஸ். சின் கொள்கை கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அதன் மாணவரணியான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை காலத்தில், பல்வேறு மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றார் . ஆர்.எஸ்.எஸ்.சின் மீது அவர் காட்டிய ஆர்வமும், உழைப்பும், 1985-ல் அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய செயலாளர் பதவிக்கு அவரை உயர்த்தியது.

அதன்பின்னர் நேரடியாக பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட அனந்தகுமார், அக்கட்சியின் இளைஞரணியில் பெரும்பங் காற்றினார். அதன் தொடர்ச்சியாக 1996-ம் ஆண்டு, அவர் பாஜக.,வின் தேசிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

பாஜகவின் பெங்களூரு முகம் என்று கூறும் அளவுக்கு பரீட்சையப் பட்டிருந்தார் அனந்த குமார்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முதல்முறையாக பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் நடைபெற்ற 98 நாடாளுமன்றத் தேர்தலில், தனக்கென பிரத்யேகமாக இணையதளம் ஒன்றை நிறுவி அதில்பரப்புரை மேற்கொண்டார். அப்போதே இணையத்தில் அவர் காட்டிய ஆர்வம், பல்வேறு அரசியல்வாதிகளுக்கு இன்றும் முன்மாதிரியாய் உள்ளது. அத்தேர்தலில் அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையில், விமான போக்கு வரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்று, இளம்வயது அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார்.

1996 முதல் 6 முறை பெங்களூரு தெற்கு தொகுதியின் எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2003-ல் கர்நாடக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றவர், அக்கட்சியை தனிப்பெரும் கட்சியாக அம்மாநிலத்தில் உருவெடுக்கச் செய்தார். அதன் விளைவாக, சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில், பாஜக அதிக இடங்களை கைபற்றியது.

அதன் தொடர்ச்சியாக 2004-ல் மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை பலபடுத்தியதில் பங்குவகித்தார். 2014-ம் ஆண்டு அமைந்த மோடி அமைச்சரவையில், உரம் மற்றும் ரசாயன அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு நாடாளுமன்ற விவகாரத்துறையிம் வழங்கப்பட்டது. 

ரசாயனத்துறை அமைச்சராக சுவிதா திட்டத்தின்கீழ் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சானிட்டரி நேப்கின்களை அறிமுகம்செய்தார். 48,000 கோடி ரூபாய் செலவில் ஆறு உரத் தொழிற்சாலை கிடங்குகளையும், அமைச்சராக அனந்தகுமார் புதுப்பித்துள்ளார்.

அரசியலைத் தாண்டி, இயற்கை மற்றும் இந்திய கலாசாரம் மீது மிகுந்த ஆர்வம்கொண்ட அவர், ஒருமனிதருக்கு ஒரு மரம் என்ற கிரீன் பெங்களூரு பிரக்ருதி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தாய் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் வகையில் சன்ஸ்க்ருதி திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.