பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சென்னையில் 6ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 156 இடங்களில் போட்டியிடுகிறது.

மீதி உள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீத்தாராமன், நிதின்கட்கரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தீவிர தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் 3 நாள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதற்காக அவர் வருகிற 6ம்தேதி தமிழகம் வருகிறார். அன்று பிற்பகல் 3.45 மணியளவில் ஒசூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் இரவு 6 மணியளவில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். அங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து அவர்பேசுகிறார். பொதுக் கூட்டத்தை முடித்து கொண்டு அன்று இரவே அவர் டெல்லி புறப்பட்டுசெல்கிறார். அதன் பின்னர் அவர் 8ம் தேதி கன்னியா குமரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து 11ம் தேதி வேதாரண்யத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

Leave a Reply