பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதிக்கு ஒரேமாதத்தில் 2-வது முறையாக நேற்று சென்றார்.

அங்கு அவர் 15, 16-ம் நூற்றாண்டில் பிரபலமாக விளங்கிய பக்தி இயக்கத்தை சேர்ந்த குருரவிதாஸ் பிறப்பிட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதன்முதலாக டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இயக்கப்படுகிற ரெயிலை அவர் பச்சைக் கொடியசைத்து தொடங்கியும் வைத்தார்.

இதையொட்டி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடந்த இந்தவிழாவிலும், தொடர்ந்து ஒரு பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கடந்த 2016-ம் ஆண்டு இதேநாளில் இங்கு வந்தேன். குருவின் ஆசிகளைப் பெற்றேன். நாம் அனைவரும் குருரவிதாஸ் காட்டிய பாதையை பின்பற்றினால், நமது சமூகத்தில் பெருமளவுக்கு ஊழல் இருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நடக்காமல் போய்விட்டது.

குரு ரவிதாஸ், சாதியின் அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். சாதியபாகுபாடு இருக்கிறவரையில், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாது. சமூக நல்லிணக்கம் சாத்தியப்படாது. சமத்துவம் உறுதி செய்ய முடியாது.

தங்களது சுய நலத்துக்காக சாதிபாகுபாடுகளை உருவாக்கி, அதை மேம்படுத்துகிறவர்களை மக்கள் அடையாளம் காட்டவேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதி பாகுபாட்டினை இப்போது வரை சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்ட முடியவில்லை. புதிய இந்தியா இதில் மாற்றத்தைக் காணப்போகிறது. இளைஞர்களுக்கு உதவப்போகிறது. ஏழைமக்களுக்கு நாங்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் கண்ணியமாக வாழ வழி பிறந்துள்ளது.

ஊழல்வாதிகளை எங்கள் அரசு தண்டிக்கிறது. நேர்மையானவர்களுக்கு பரிசு அளிக்கிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பலம்வாய்ந்த எங்கள் அரசை தேர்ந்தெடுத்தீர்கள். அதன் காரணமாக இந்த நாடு முன்னேற்றத்தை கண்டது. நீங்களும் சமூக, பொருளாதார நிலையில் முன்னேறுவதற்கு பல திட்டங்களைப் பெற்று பலன்அடைந்தீர்கள். அதேபோன்று வரக்கூடிய தேர்தலிலும் நீங்கள் செயல்படவேண்டும். பாரதீய ஜனதாவை தேர்ந்தெடுத்தால், வளர்ச்சிப் பணிகள் தொடரும்.

காங்கிரஸ் ஆட்சியின் போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறியது போன்று நடைபெறவில்லை. அதுபோலியானது என்பதை மக்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நல்லதொரு உதாரணம். ஆனால் அதையும் சிலர் விமர்சிப்பது வேதனை அளிக்கிறது.

இப்படிப் பட்டவர்களுக்கு (எதிர்க் கட்சிகளுக்கு) மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தகுந்பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply