நயினார் நகேந்திரன் உன்னை விலைக்கு வாங்கிவிட்டார் என சொல்லி நோகடிக்கின்றனர் சிலர்

எம்மை நீண்டகாலமாக தொடர்ந்து வருபவர்களுக்கு மட்டும் புரியும், நாம் தேசநலனை தவிர ஏதும் எழுதமாட்டோம் என்பது

ஆயினும் இப்பொழுது ஏன் அவரை இழுக்கின்றார்கள்? அவரை பற்றி எங்கோ எழுதபோக இப்பொழுது சிக்கி கொண்டேன்

அந்த மனிதன் அன்று செய்த உதவி அப்படி, அதை மறக்க முடியாது

அது எம் வாழ்வின் நெருக்கடியான காலகட்டம் , 19 வயது இருக்கலாம் என் தந்தையின் கண்ணீர் தவிர ஒன்றும் தெரியாது அதாவது அவருக்கு உதவும் அளவு கூட உலகம் புரியாத பருவம், யாரையும் தெரியாது

தன் சகோதரரின் வஞ்சகத்தில் ஒரு பவர் பத்திரம் எழுதி கொடுத்திருந்தார் தந்தை, அதைவைத்து இவரிடம் சில சொத்துக்களை ஒப்படைத்திருந்தார் அவர் உடன்பிறப்பு

அவை எல்லாம் பாட்டன் பெயரில் இருந்த சொத்துக்கள், கொஞ்சமும் பிரிவினை செய்யபடவில்லை

அந்த சொத்து மொத்தமாக நயினார் நாகேந்திரனின் கட்டுபாட்டில் சென்றது, அப்பொழுது அவர் அமைச்சர் சர்வ சக்தி நிறைந்த ஜெயாவின் தென்னக தளபதி

அவரைபற்றிய பிம்பம் அப்பொழுது அப்படி இருந்தது, அவர் கைக்கு சென்றது திரும்பாது விழுங்கிவிடுவார் என ஏக அச்சுறுத்தல்கள்

பிரம்ம ராட்சசன் அளவுக்கு பயமுறுத்தி வைத்திருந்தார்கள்

எல்லாம் அழிந்தது இனி அழிய என்ன இருக்கின்றது என்ற நிலையில்தான் அவரிடம் சிக்கலை சொன்னோம்

ஆம் அது பாண்டவர் கவுரவரிடம் கட்டுபட்டு நின்றது போன்ற நிலை, எம்மிடம் ஒரு பலமுமில்லை பத்திரமுமில்லை

ஆனால் பூர்வீக சொத்து போனது எனும் வலி, நம்பி கையெழுத்து போட்டு கொடுத்தவர்கள் செய்துவிட்ட கொடூர வலி

அந்த நரிகள் இந்த புலியிடம் எம்மை பிடித்து கொடுத்தது போன்ற நிலை

அப்பொழுதுதான் இவரை சந்திக்கும் அவசியம் வந்தது, அதுவரை அவரும் நாங்களும் முன்னபின்ன சந்தித்தது கூட இல்லை அவர்க்கு நெருக்கமானவர்கள் எல்லாம் பங்காளிகளே

வாழ்வியல் நெருக்கடியில் அன்று பாஞ்சாலி கத்தியது போலத்தான் நாங்களுமிருந்தோம், ஆம் இனி உனக்கு ஒன்றுமே இல்லை என சொந்தங்கள் முடித்திருந்தன‌

அந்நிலையில்தான் அவரிடம் விஷயங்களை சொன்னோம்

மனிதர் கூர்ந்து கேட்டார், சம்பந்தபட்டவர்களிடம் பேசுகின்றேன் என சொல்லிவிட்டார்

அதன் பின் அவர் சார்பாக யாரெல்லாமோ வந்தார்கள், அந்த அயோக்கிய பங்காளிகளை பிடித்து வைத்து பாகபிரிவினை செய்தார்கள் , எங்களுக்குரிய நியாயமான பங்கு வந்தது

எங்களுக்கு அவர் அன்று கண்ணணாகவே தெரிந்தார்?

யார் அவர்? கட்சியா? ஊரா? சாதியா? எதுவுமே இல்லை அவருக்கும் எங்களுக்கும் என்ன உறவு?

ஒன்றுமே இல்லை

ஆனால் கடவுள் மட்டுமே கொடுக்க கூடிய நீதியினை அன்று அவர் எங்களுக்கு கொடுத்தார்

“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு”

அந்த அவ்வையாரின் வாக்கு போல உடன்பிறந்தார் கொன்றபொழுது மருந்தாக வந்தவர் அவர்

அப்பொழுதும் அந்த சண்டாளர்கள் பல லட்சம் கடனோடே எம்மை நிறுத்தினார்கள், அந்த கடனை அவர்தான் ஏற்றார்

“எப்படி அடைக்க போகின்றாய் என்றார்?” 20 வயதான எனக்கு என்ன தெரியும்?

முட்டையில் இருந்து வந்த கோழி குஞ்சு போல முழித்துகொண்டிருந்தேன்

தெரியவில்லை என்றேன், “பயப்படாதே நானே பொறுப்பேற்கின்றேன்” என்றார்

நன்றாக நினைவிருக்கின்றது வறுமை மிகுந்த அந்த காலகட்டத்தில் முதல்முறை மலேசியா வர பணம் கொடுத்தவரும் அவரே

இது ஏழையாக்கபட்ட‌ குடும்பமாயிற்றே, ஏகபட்ட சிக்கலில் வேறு இருக்கின்றதே வசமாக இந்த சொத்துக்களை அபகரிக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சமும் இல்லை, அப்படி ஒருமனம் வாய்ப்பது அரிது

ஆம் அந்த கடனை நான் மலேசியா வந்தபின்புதான் அடைத்தேன், துளியும் வட்டியோ எதுவோ அவர் கொடுக்கவில்லை

துளி அதிகாரம் இருந்தாலும் எப்படி அடுத்தவனை கொன்று சுருட்டலாம் எதை பறிக்கலாம் என அலையும் உலகில் அவர் அபூர்வம்

இன்று பலகோடிரூபாய் பெருமான அந்த சொத்துக்களை நினைத்தால் அவர் நொடியில் தட்டியிருக்கலாம், அவருக்கு அந்த அளவு அரசியல் பணபலம் என எல்லாம் இருந்தது

எம்ம்மிடமோ கண்ணீரை தவிர ஏதுமில்லை

ஆனால் துளியும் அவரிடம் அந்த அபகரிக்கும் ஆசை இல்லை, மாறாக ஏழை என்றாலும் மதிக்கும் மாண்பு இருந்தது

எது நேமையோ, எது உதவியோ அதை மிக சரியாக செய்தார்

அதுபற்றி அவர் அலட்டவுமில்லை , ஒருமுறை கேட்டபொழுது “அது உங்கள் சொத்து உங்களுக்கு வராமல் யாருக்கு செல்லும்?” என்பதை தவிர வேறு பதில் அவரிடம் இல்லை

தொழிலில் சுத்தம், சுற்றத்தாரிடம் இரக்கம் , யார் எந்த உதவி கேட்டாலும் செய்யும் மாண்பு, யார் எதிர்த்தாலும் நியாயத்தை மட்டுமே செய்யும் உன்னத மனம்

அதன் மொத்த உருவம் அந்த மனிதர்.

சட்டமும் அதிகாரமும் இன்னும் பல பலமும் அவரிடம் இருப்பினும் எது தர்மம் என சீர் தூர்க்கி பார்க்கும் உயர்ந்த குணம்

ஆம் சட்டபடி அந்த சொத்து அவருக்கே, ஆனால் தர்மபடி எங்களுக்கே..

அவர் அந்த தர்மத்தை செய்தார், கடவுளின் நிலையில் இருந்து செய்தார்

அந்த நியாயமான அணுகுமுறைதான் அவருக்கு தொழிலிலும் அரசியலிலும் உச்சம் கொடுத்தது

80 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர் நெல்லையில் வெற்றியினை பறிகொடுத்தார்

இப்பொழுதும் நெல்லையில் அவர் தோற்றது பற்றி வருந்துவோர் உண்டு, அந்த அளவு அங்கு எந்நாளும் அவருக்கு அபிமானம் உண்டு

இப்பொழுது அவர் பாஜக, ராமநாதபுரம் தொகுதிக்கு சென்றுவிட்டார்

அவர் வெல்வாரா மாட்டாரா என்பது காலத்தின் கையில் இருக்கின்றது

அவரை வாழ்வில் இருமுறைதான் சந்தித்திருக்கின்றேன் மற்றபடி ஒன்றுமில்லை

அவருக்காக எழுத ஆரம்பித்தால் இப்படி எல்லாம் எழுதியிருக்க மாட்டோம்

தனிபட்ட நன்றிகடன் வேறு, அரசியல் வேறு, நாடு வேறு

எது எப்படியாயினும் இதுகாலம் நான் கண்டிருக்கும் நல்லவர்களில் அவரும் ஒருவர்

அந்த மாபெரும் உதவிக்கு பலன் கூட அவர் எதிர்பார்க்கவில்லை , மழை பெய்துவிட்டு தன் போக்கில் செல்வது போல் சென்றார்

எமக்கு அவர் எந்நாளும் அந்த கிருஷ்ணபரமாத்மா வடிவமே, அந்த ஆயர்பாடியும் பாண்டவரும் பெற்றது போல நாமும் பெற்றோம்

அவரால் வாழ்வு பெற்றவர்கள் யாரெல்லாம் என தெரியவில்லை

ஆனால் நாம் பெற்றோம், பெரும் நிம்மதி அவராலே இல்லத்தில் குடிவந்தது

கோர்ட்டுக்கு சென்றால் 50 வருடம் இழுத்திருக வேண்டிய வழக்கினை 5 நாளில் முடித்து கொடுத்தவர் அவர்

இந்த சந்திரமதியின் தாலி அரிச்சந்திரனுக்கு மட்டும் தெரியுமாம், அப்படியாக என் துயரமும் கண்ணீரும் அந்த மனிதனுக்கு மட்டும்தான் அன்று புரிந்தது

அவரின் அரசியல் பற்றி எமக்கு தெரியாது, ஆனால் அவரும் அவர் சந்ததியும் எங்கிருந்தாலும் நல்வாழ்வு வாழ்வார்கள்.

எம் பிரார்த்தனையில் எந்நாளும் அவர் செய்த உதவிக்கு பிரதான இடம் உண்டு

Stanley Rajan

Tags:

Leave a Reply