உடல்நலக் குறைபாடு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் பல்ராஜ் மதோக் சிகிச்சைப் பலனளிக்காமல் திங்கள்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 96.


 பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான அவர், கடந்த ஒரு மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், சிசிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.

ஒன்றிணைந்த ஜம்மு- காஷ்மீரின் ஸ்கார்து பகுதியில் 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பிறந்தார் மதோக்.
 கடந்த 1951-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய ஜனசங்கக் கட்சியின் தலைவராக அவர் 1966-இல் பொறுப்பேற்றார். கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதுவரை ஜனசங்கம் பெற்றிராத வகையில் 35 தொகுதிகள் என கணிசமான வெற்றி பெற பெரிதும் பாடுபட்டார்.

 இந்நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். மறைந்த பல்ராஜ் மதோக்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.


 முன்னதாக, சுட்டுரைப் பக்கத்தில் (டுவிட்டர்) பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "மறைந்த பல்ராஜ் மதோக்கின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது சித்தாந்த அர்ப்பணிப்பும், அளப்பரிய தெளிவான எண்ணங்களும் மிகவும் பலம் வாய்ந்தவையாகும். பல்வேறு தருணங்களில் அவருடன் உரையாடியதை பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அறிவியல்- தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply