கர்நாடக சட்ட சபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க அகில இந்தியதலைவர் அமித்ஷா நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இங்குகிடைக்கும் வெற்றி தென்னிந்தியாவின் நுழைவுவாயிலாக எங்களுக்கு அமையும்.

கர்நாடக தேர்தல்முடிவு இழுபறியாக இருக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுவது சரிஅல்ல. இங்கு அரசு மீது கெட்ட பெயர் இருக்கிறது. அவர்கள் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செய்ய வில்லை.

எனவே, பாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் மோடிக்கு கர்நாடக மக்களிடம் நல்லசெல்வாக்கு இருக்கிறது. எனவே, பா.ஜனதா வெற்றி உறுதி.

ஏற்கனவே இதேபோல் பலமாநிலங்களில் வந்த கருத்துகணிப்புகளை நாங்கள் பொய்யாக்கி காட்டி இருக்கிறோம். திரிபுரா, உத்தரகாண்ட், மணிப்பூர், குஜராத் போன்றவற்றிலும் இது போன்ற கருத்துகணிப்புகள் வந்தன.

ஆனால், நாங்கள் வெற்றிபெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தோம். அதேபோன்ற நிலை கர்நாடகாவில் ஏற்படும்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஜாதி அரசியலை முன்வைத்து செயல்படுகிறது. எங்கள் கட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் முதல்-அமைச்சரோ, எம்.எல்.ஏ.க்களோ யாரும் ஜாதிபார்த்து செயல்படுவதில்லை.

உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு வந்த போது யாதவ சமுதாயத்துக்கு மட்டும் தான் பாடுபட்டார். அதேபோல் மாயாவதி ஆட்சிக்கு வந்தபோதும் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு சாதகமாக மட்டுமே செயல்பட்டார்.

ஆனால், நாங்கள் ஆட்சியில் உள்ள அனைத்து இன மக்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம்.

கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி தப்பிவிடுவதால் தான் இனி அதுபோன்று நடக்காமல் இருக்க குழந்தைகள் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அவசரசட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம்.

பாரதிய ஜனதா கூட்டணியில் சிவசேனா, தெலுங்குதேசம் போன்ற கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் போல எல்லா காலத்திலும் நடந்துள்ளது.

வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது கூட இது போல் கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜி, ஜெயலலிதா ஆகியோருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. சிவசேனாவுடன்கூட அப்போது பிரச்சினை எழுந்தது.

எங்கள் கூட்டணியில் மட்டும் அல்ல. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் அதே போல் அவர்கள் கூட்டணியிலும் பிரச்சினைகள் இருந்தது.

2014-ல் நாங்கள் எந்தமாதிரி கூட்டணி அமைத்து இருந்தோமோ அதைவிட பெரிய கூட்டணியை 2019 தேர்தலில் ஏற்படுத்துவோம். இப்போது திரிபுரா, அசாம் மாநிலங்களில் கூட்டணி ஏற்படுத்தி இருக்கிறோம். உத்தர பிரதேசத்தில் 2 கட்சிகளும், மகாராஷ்டிராவில் 3 கட்சிகளும் எங்களுடன் இருக்கின்றன. பீகாரில் நிதிஷ் குமார் எங்களோடு இருக்கிறார். எனவே, கடந்த தேர்தலைவிட மிகப்பெரிய கூட்டணி வரும் தேர்தலில் அமையும்.

நாங்கள் இதுவரை வெல்லாத 219 தொகுதிகள் உள்ளன. ஆனால், 2019 தேர்தலில் அந்ததொகுதியில் பலவற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம்.வடகிழக்கு மாநிலங்களில் 18 தொகுதியில் நாங்கள் வெல்லக் கூடிய நிலையில் இருக்கிறோம். ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கடந்த தேர்தலில் நாங்கள் 3-வது இடத்தில் இருந்தோம். இப்போது அங்கு 2-வது இடத்துக்கு வந்திருக்கிறோம். அங்கும் பலதொகுதிகளில் வெற்றிபெறுவோம்.

தெலுங்கானா மாநிலத்திலும் பலதொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். நாங்கள் கட்சியை விரிவாக்கும் திட்டங்களை தொடர்ந்து செய்துவருகிறோம். இதன் காரணமாகத் தான் இப்போது பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2014-ல் எங்களுக்கு கிடைத்த இடங்களைவிட 2019 தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கும்.இடைத்தேர்தல் சிலவற்றில் நடந்த முடிவுகளை வைத்து பாராளுமன்ற தேர்தலில் எடைபோட முடியாது. பிரதமராக நரேந்திர மோடி இருக்க வேண்டுமா? அல்லது வேறு ஒருவர் வரவேண்டுமா? என்பதுதான் அடுத்த தேர்தலில் உள்ள முக்கிய கேள்வி.

எதிர்க்கட்சியில் இதற்கு தகுதியான நபர் யார் என்பதைகூட சொல்ல முடியவில்லை. அவர்களே குழம்பிபோய் இருக்கிறார்கள். மோடி ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாடு பல்வேறு நிலையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பிரதமர் மோடியைத் தான் மக்கள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply