மத்திய அரசுப்பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களுக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அதுபற்றி இணைய தளம் மூலமாக புகார் தெரிவிக்க விரைவில் வழிவகை செய்யப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்ஊழியர்களின் வசதிக்காக, அவர்களுக்கு ஏதேனும் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பின், உயர் அதிகாரிகளிடம் நேரில் புகார்தெரிவிக்க முடியும். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்களை உள்ளடக்கிய மகளிர் தீர்வுமையங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதுபோன்ற முறையில் புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்விவரம் வெளிப்படையாக தெரியவரும்.

ஆனால் இணையதளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டால், புகார் தெரிவிக்கும் பெண்ஊழியர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாகப் பாதுகாக்க முடியும். எனவே, அத்தகைய இணையவழி புகார் தெரிவிக்கும் வகையிலான வசதி, இதுவரை நடைமுறையில் இல்லை. தற்போது மத்திய அரசு பெண்ஊழியர்கள், இணைய தளம் மூலமாக தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை அளிக்க முடியும் என்று மேனகா காந்தி, டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் மூலமாக இதுபோன்ற புகார் தெரிவிக்கும் வசதியானது, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதள முகவரியில் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும் என்றும், இதற்காக மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிரமாக செயலாற்றிவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆன்லைனில் புகார் தெரிவிக்கக்கூடிய வசதியை தொடங்குவதற்கு, மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையத்தின் ஒப்புதலைப் பெற மகளிர் அமைச்சகம் காத்திருப்பதாகவும், அநேகமாக ஒருமாதத்துக்குள் இந்த ஆன்லைன் சேவை தொடங்கி வைக்கப்படும் என்றும் மேனகா காந்தி கூறினார். ஆன்லைனில் பெறப்படும் இந்தப் புகார்கள், பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.

பல்வேறு அமைச்சகங்களின்கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் இருந்து அதிகளவில் பாலியல் துன்புறுத்தல் குறித்தபுகார்கள் வந்ததை அடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தப் புகார்களைத்தெரிவிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்துவது என  மத்திய மகளிர் அமைச்சகம் முடிவுசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, கடந்த ஒருஆண்டாக, மின்னணு முறையிலான புகார்பெட்டி வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தவர், ஆன்லைனில் புகார் தெரிவிக்கும் நடைமுறையும் அதேமுறையில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றார். பெண்கள் தெரிவிக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின்மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற புகார்கள் தமது அமைச்சகத்துக்கும் அதிகளவில் வரப்பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒருநிறுவனமோ அல்லது மத்திய அரசு அலுவலகமோ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரேகழிவறை பயன்பாடு கூட பாலியல்ரீதியான துன்புறுத்தல் தான் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்களை ஒவ்வொரு அமைச்சகங்களிலும் உள்ள குழுக்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர், பெண்கள் பணிபுரியும் இடங்களில் மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம் என்றார்.

Leave a Reply