பிச்சைக்காரர்களை ஒழிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, ஆதரவற்றோர் மற்றும் மிகவும் ஏழைகளுக்கு, தொழில் திறன், தங்குமிடம் மற்றும் நிதியுதவி அளித்து, அவர்களை பிச்சைக்காரர்களாக மாறாமல் தடுக்கும் புதுமையான முயற்சியில் இறங்கவுள்ளது. இதற்காக, விரைவில் புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க உள்ளது.
மத்தியில் ஆளும், பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, உலக அளவில், இந்தியாவுக்கு மிகுந்த கெட்ட பெயரை கொண்டு வரும் இரண்டு அம்சங்களை நாட்டிலிருந்தே ஒழிக்க முடிவு செய்துள்ளது. ஒன்று, குப்பை; மற்றொன்று பிச்சைக்காரர்கள். குப்பை, கூளங்களை ஒழிக்கவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்தி வரும் மத்திய அரசு, பிச்சைக்காரர்களே உருவாகாத வகையில், புதுமையான திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
வீடு, சிகிச்சை: அந்த வகையில், 'இவர்கள் இன்னும் சில நாட்களில் பிச்சைக்காரர்களாக மாறிவிடுவர்' என்ற நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான, குடியிருக்க வீடு, நோய் ஏற்பட்டிருந்தால், அதை குணப்படுத்த சிகிச்சை, கை, கால் திறனாக இருந்தால், அத்தகையவர்களுக்கு தொழில் பயிற்சி, தொழில் துவங்க நிதியுதவி வழங்குவது என,
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிச்சைக்காரர்களுக்கு முந்தைய நிலையாக கருதப்படும் ஆதரவற்றோரை அடையாளம் கண்டு, அவர்கள் மேம்பாட்டிற்காக திட்டம் கொண்டு வர உள்ளது.
அதை எப்படி செயல்படுத்த உள்ளது என்பதை காணலாம்.
* வீடு இல்லாத, சொந்த பந்தங்கள் இல்லாதவர்கள் அடையாளம் காணப்படுவர்* அவர்களுக்கு, 'கவுன்சலிங்' எனப்படும் ஆலோசனை அளித்து, பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட விடாமல் தடுப்பது.
* அத்தகையவர்களில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, திறன் பயிற்சி அளித்து, அவர்களுக்கு ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொடுப்பது* உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை மீண்டும் உறவினர்களுடன் இணைப்பது
கடத்தும் கும்பல்:
* உடல் நலக்குறைபாட்டால், பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து, :தேவையானசிகிச்சை அளிப்பது
* பிச்சையில் ஈடுபடுத்துவதற்காக, குழந்தைகள், முதியவர்களை கடத்தும் கும்பலை முழுமையாக ஒடுக்குவது.இதை எவ்வாறு செம்மையாக செயல்படுத்துவது என்பது தொடர்பாக, மத்திய அரசு திட்டமிட்டுள்ள அம்சங்கள்:
* கண்டுபிடிக்கப்படும் ஆதரவற்றோர்களின் விவரங்களை, நாடு முழுமைக்குமான, மாநில வாரி பட்டியலாக தயாரித்து, அதில் அவர்களின் பெயர், புகைப்படம், அவர்களுக்கு அளிக்கப்படும் உதவிகள், பயிற்சிகள் போன்ற தகவல்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்
* மத்திய அரசு திட்டமாக இருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டியது மாநில அரசுகள் தான் என்பதால், அதை செயல்படுத்தவும், கண்காணிக்கவும், மாநில ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும்.மேலும், பிச்சை எடுப்பவர்களை கைது செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது.
புள்ளிவிவரம் இது!: 1.பிரிட்டனின், 'ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகம் நடத்திய கணக்கெடுப்பால், இந்தியாவில், பிச்சைக்காரர்கள் உட்பட, 34 கோடி ஆதரவற்றோர் உள்ளனர்.2. தென் கிழக்கு ஆசிய நாடுகளில், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த படியாக மிகவும் ஏழை நாடு இந்தியா தான்.3.ஆனால், கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நாடு முழுவதும் நான்கு லட்சம் பிச்சைக்காரர்கள் தான் உள்ளனர் என, கணக்கிடப்பட்டு உள்ளது.
விதவைப்பெண்கள் மறுவாழ்விற்காக, மத்திய அரசு புதுமையான மற்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.அதன் படி, மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்ற, விண்ணப்பிக்கும் விதவைப் பெண்களுக்கான வயது உச்ச வரம்பை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.இதற்கான அறிவிப்பை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வெளியிட்டார். யூ.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விதவைகளுக்கு, வயது உச்சவரம்பு, 30 ஆக உள்ளது.நாடு முழுவதும், 4.7 கோடி விதவைகள் உள்ளனர்; மொத்த மக்கள் தொகையில், இவர்கள், 3 சதவீதமாக உள்ளனர்.
அதிகாரிகள் ஆலோசனை: 'துாய்மை இந்தியா' திட்டத்தை இன்னும் சிறப்பாக மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும், அரசு நிர்வாகத்தை மேலும் வெளிப்படையாக மாற்றுவது எவ்வாறு என்பது குறித்தும் ஆலோசனை வழங்குமாறு, மத்திய அரசின் துறை செயலர்களான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் படி, நேற்று, பல மூத்த அதிகாரிகள், தங்களின் அறிக்கையை, பிரதமர் மோடியிடம் வழங்கினர்; அவற்றில், பல புதுமையான செயல் திட்டங்கள் இருந்தன. பரிசீலனைக்கு பின், அதை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.
முந்தைய அரசுகளின் முயற்சி:
பிச்சைக்காரர்களின் முந்தைய நிலையான ஆதரவற்றோருக்கு, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை, கடந்த ஆண்டுகளில் செயல்படுத்திஉள்ளன. அதன் பிறகு பல காரணங்களால் அவற்றை கைவிட்டுள்ளன. பிச்சைக்காரர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி, அவர்களை அந்த தொழிலில் இருந்து மீட்க, 1992 – 98 வரை சில திட்டங்கள் இருந்தன. அந்த திட்டங்களின் படி, வீடுகள், தொழிற்பயிற்சிகள், தொழிற்கல்வி போன்றவை பிச்சைக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.அதன் குறைபாடுகள், புதிய சட்டத்தில் களையப்பட உள்ளன.
நன்றி தின மலர்