பினாமிசொத்து வைத்திருப் போருக்கு 7 ஆண்டுகள்வரை சிறைதண்டனை விதிக்கப்படும். அத்துடன் அந்த சொத்தும் பறிமுதல் செய்யப் படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி பணமதிப்புநீக்கம் என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் ‘மன் கி பாத்’ (மனதில் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1988-ல் கொண்டுவரப்பட்ட பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச்சட்டம் கடுமையான திருத் தங்களுடன் விரைவில் அமல்படுத் தப்படும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள்  கூறியதாவது:

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் அடுத்தகட்டமாக சந்தேக படும்படியான ரியல்எஸ்டேட் சொத்துகளையும் அரசு கண் காணிக்கவேண்டும் என எதிர்பார்த்தோம். அதற்கு ஏற்றபடி பிரதமர் நரேந்திரமோடியும் கடுமையான விதிகளுடன் பினாமிசொத்து பரிவர்த்தனை தடைச்சட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். எனவே கடந்த ஜூலை வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கின் அடிப்படையிலும், வங்கி பரிவர்த்தனைகள் அடிப்படையிலும் சந்தேகப் படும்படியான ரியல் எஸ்டேட் சொத்துகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தச் சூழலில் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் அடிப்படையில் பினாமி சொத்து வைத்திருப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அந்தசொத்தும் பறிமுதல் செய்யப்படும்.

தற்போதைய கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு நகரத்திலும் 5 முதல் 10 சதவீத ரியல் எஸ்டேட் நிலங்கள் வரி ஏய்ப்பு செய்பவர்களால் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply