பிரதமர் நரேந்திரமோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு, நாட்டுமக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றியபோது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் அன்று முதல் செல்லாது என அவர் அறிவித்தது, கருப்பு பண முதலைகளை  அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம், அதன் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்பமொய்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பாரதீய ஜனதா தலைவர்கள் நிஷிகாந்த் துபே, ரத்தன்லால் கட்டாரியா, பிஜூ ஜனதாதள தலைவர் மகாதேவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த கூட்டம், பணமதிப்பு நடவடிக்கையினால் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள், இந்திய ரிசர்வ் வங்கியில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள், வங்கிகளின் வாராக் கடன்களை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அந்த அழைப்பிற்கு இணங்க அவரும் கலந்துகொண்டார். இந்த நிலைக் குழுவின் முன்பாக அவர் ஆஜரானது இது மூன்றாவது முறை.

இந்த கூட்டத்தில் அவர், பிரதமர் நரேந்திரமோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்தார்; இந்தநடவடிக்கை, ஒரு நல்ல முடிவு என அவர் குறிப்பிட்டார்; வாராக் கடன் பிரச்சினையில் மெதுவாக முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் நிதிக் கொள்கையில் ரிசர்வ் வங்கிக்கு எந்தமுரண்பாடும் இல்லை எனவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் வங்கி வைத்துக் கொள்ள வேண்டிய ரொக்க கையிருப்பு அளவு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்துதல் உள்ளிட்டவற்றில் கடுமையான  போக்கை கடைப்பிடித்து வந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் உர்ஜித் படேல் ஆஜரானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதேபோன்று, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவுபடுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய்நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர்” என்று கூறிய நிலையில், தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.  

Leave a Reply