பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாகசம்பாதித்து, அதை சாதித்துக் காட்டியவர் நரேந்திர மோடி’ என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, பிரணாப்முகர்ஜி தன்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான, பிரணாப்முகர்ஜி, ‛தி பிரெசிடென்ஷியல் இயர்ஸ், 2012 – 17′ என்ற தலைப்பில், தன் பதவிக்காலம் குறித்த அனுபவத்தை புத்தகமாக எழுதினார். அவர் கடந்த ஆண்டு மறைந்தநிலையில், அப்புத்தகம், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திரமோடி குறித்து, பிரணாப் முகர்ஜி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தல்முடிவுகள், இரண்டு காரணங்களுக்காக, வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. முதலாவது, 30 ஆண்டுகளுக்குப்பின், தேர்தலில் தீர்க்கமான முடிவினை மக்கள்வழங்கினர்.இரண்டாவது, முதல்முறையாக, லோக்சபாவில் தனிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக, பா.ஜ., வெற்றிபெற்றது. அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என, மக்கள் விரும்பியதன் பிரதிபலிப்பாகவே இந்த வெற்றியை பார்க்கிறேன்.
மேலும், சுய லாபத்திற்காக, அரசியல் கட்சிகள் கூட்டணியை மாற்றிக்கொள்வதை கண்டு, மக்கள் விரக்தி அடைந்ததும், பா.ஜ.,வின் வெற்றிக்கு காரணம்.

ஐ.மு., கூட்டணி வெற்றிபெற்றபோது, பிரதமராக பொறுப்பேற்க சோனியா மறுத்ததை அடுத்து, அந்த பதவி, சோனியாவால் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. ஆனால், நரேந்திரமோடி பிரதமரானது அப்படியல்ல. பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்கு முன்பே, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது.அதற்கு மக்களும் ஏகோபித்த ஆதரவை அளித்தனர். பிரதமர் பதவிக்கான தகுதியை, சுயமாக சம்பாதித்து, அதை சாதித்துக்காட்டியவர் நரேந்திர மோடி.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.