ஒடிசாவில் அடுத்தமாதம் (ஏப்ரல்) 15, 16-ந்தேதிகளில் 2 நாட்கள் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி அந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி ஒடிசாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புதெரிவித்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சுமார் 20 பேர்கொண்ட மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ராயகடா மாவட்டத்தில் உள்ள டோய்காலு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள் ரெயில் நிலைய அதிகாரி பரிதா, போர்டர் கோபிந்த் ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வெளியில் வர வைத்தனர். பிறகு அவர்கள் ரெயில்நிலையத்துக்குள் புகுந்து மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்தனர். ரெயில்வே ஆவணங்களையும் கிழித்து எறிந்தனர்.

பிறகு மாவோ யிஸ்டுகள் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து குண்டுகளை வைத்தனர். ரிமோட்கண்ட்ரோல் மூலம் அந்த குண்டுகள் வெடிக்க செய்யப்பட்டன.

இதில் ரெயில் நிலையம் தகர்ந்தது. அப்போது அந்தவழியாக வந்த சரக்கு ரெயிலையும் மாவோயிஸ்டுகள் சேதப்படுத்தினார்கள். பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மாவோயிஸ்டுகள் அந்த பகுதியில் எச்சரிக்கை நோட்டீசுகளையும் விட்டுசென்றிருந்தனர். அதில், "பிரதமர் மோடி ஒடிசாவுக்கு வரக்கூடாது. வந்தால் இதுபோல் தாக்குதல்கள் தொடரும்" என்று எழுதப்பட்டு இருந்தது.

மற்றொரு நோட்டீசில், ஒடிசா முதல்மந்திரி நவீன் பட்நாயக்கை கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்டுஇருந்தது. ஒடிசா மாநிலத்தில் உயர்போலீஸ் அதிகாரிகளாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்படுவதற்கும் எதிர்ப்புதெரிவித்து மாவோயிஸ்டுகள் அந்த நோட்டீசுகளில் எழுதி இருந்தனர்.

மாவோயிஸ்டுகள் நடத்திய குண்டுவெடிப்பு பற்றி கேள்வி பட்டதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணி போலீசாருடன் அங்கு விரைந்துசென்றார். ரெயில்வே உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குவந்தனர். அவர்கள் ஆய்வு செய்தபிறகு மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கான வேட்டை அந்தபகுதியில் தொடங்கியது.

குண்டு வெடிப்பு காரணமாக ராயகடா மாவட்டத்தில் உள்ள ரெயில் வழித்தடங்களில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply