நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை, தாம் இயற்றிய அரசியல்சட்ட சாசனம் மூலமாக பாதுகாத்தவர் அம்பேத்கர் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று அங்கு சென்றார். ராய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தவருக்கு, முதல்வர் ரமண்சிங் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், நக்சல் ஆதிக்கம்நிறைந்த பிஜாப்பூர் மாவட்டத்துக்குச் சென்ற அவர், அங்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் ஒரு காலத்தில், தலித் மக்களுக்கும், பின்தங்கிய வகுப்பினருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன. தலித் சமூகத்தில் பிறப்பதையே சாபக்கேடாக கருதிய காலகட்டம் அது. அதன் கொடுமையையும், வலியையும் முழுமையாக அனுபவித்தவர் அம்பேத்கர்.

இந்தக் கொடுமையிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மனிதராக பிறந்த அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கும் உயரிய அரசியல் சட்டசாசனத்தை அவர் வடிவமைத்தார்.

அம்பேத்கர் என்ற ஒருவரால் தான், தலித் சமூகத்தினரும், பின் தங்கிய சமூகத்தினரும் தங்களின் உரிமைகளைப் பெற முடிந்திருக்கிறது. அம்பேத்கர் மட்டும் இல்லையென்றால், ஒரு ஒடுக்கப்பட்ட கிராமத்தில் பிறந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த நான், இந்தியாவின் பிரதமராக உயர்ந்திருக்க முடியாது.

அனைவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் அம்பேத்கரின் அரசியல் சட்ட சாசனத்தை அடிப்படையாகக் கொண்டே மத்திய அரசு செயல்படுகிறது. எனவே, உரிமைகளைப் பாதுகாக்கவேண்டி, யாரும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமில்லை. நக்சல்கள், வன்முறைப் பாதையைக் கைவிட்டு தேசியநீரோட்டத்தில் இணைய வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அவர்களும் பங்கெடுக்கவேண்டும் என்றே அரசு விரும்புகிறது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதல் சுகாதார மையத்தை பிஜாப்பூரில் மோடி தொடங்கிவைத்தார்.

குடூர் – பானுபிரதாப்பூர் இடையே புதியபயணிகள் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார். புதிய சாலை, மேம்பால திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *