பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இணைத்தலைவரும், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், பில்கேட்ஸ் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது சுகாதாரம், ஊட்டச் சத்து மேம்பாடு மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பில் கேட்ஸ் அறக்கட்டளை மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டது. இதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மேலும் இவற்றில் ஆதாரங்களுடன் கூடிய புள்ளிவிவரங்களுடன் அனுகும்போது அதன் பயன்பாட்டை அதிகரிக்க முடியும். இதில் பில் கேட்ஸ் அறக்கட்டளையின் பங்கு சிறப்பானதாக உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் பில்கேட்ஸ் உடனான சந்திப்பு குறித்து தனது சுட்டுரைப்பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதாவது,

பில் கேட்ஸை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதில் அவருடனான சந்திப்பு எப்போதுமே திருப்தி கரமாக இருந்து வருகிறது. எந்தவொரு விவகாரத்திலும் அதன் அடித்தளத்தில் இருந்து புதிய அணுகு முறையுடன் கையாண்டு நமது உலகை சிறந்த வாழ்விடமாக மாற்றும் பணியில் பில் கேட்ஸ் எப்போதும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுகிறார் என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீடித்தவளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை தங்கள் நாட்டிலோ அல்லது பல்வேறு நாடுகளிலோ வெற்றிகரமாகச் செயல்படுத்தும் உலகநாடுகளின் தலைவர்களுக்கு சர்வதேச இலக்காளர் விருதை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கிவருகிறது.

அந்தவகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இலக்கை அடைவதற்கு பிரதமர் நரேந்திரமோடி அளித்த பங்களிப்புக்காக இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் செப். 24-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அறக்கட்டளை தலைவர் பில்கேட்ஸ் ‘Global Goalkeeper Award’ விருது வழங்கி கௌரவித்தார்.

Comments are closed.