நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பீகாரில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலையை இழந்திருந்தால்கூட அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 95 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளதுடன் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் வாக்குகளை சேர்த்தால் ஒருகோடியே 30 லட்சம் வாக்குகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பீகாரில் காங்கிரஸ், ராஷ்டரிய ஜனதா தளம், நிதிஷ்குமார் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. நிதிஷ் குமார் கட்சி ஏற்கனவே கைப்பற்றி இருந்த இடங்களை விட பாதி அளவிலான இடங்களையே கைப்பற்றி உள்ளது. இது தோல்வியைகாட்டி உள்ளது.

கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா, நிதிஷ் குமார் கூட்டணி 200 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தற்போது உள்ள மெகா கூட்டணி 178 இடங்களையே கைப்பற்றி இருக்கிறது.

பீகார்தேர்தல் முடிவு அகில இந்திய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. 2016 தமிழக சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும்.

குளச்சல் துறைமுக பிரச்சனை தொடர்பாக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது துரதிர்ஷ்ட மானது. குளச்சலில் துறை முகம் அமையவேண்டும் என்பது 60 ஆண்டுகால கனவாகும்.

மழைநிவாரணம் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. மத்திய அரசின் உதவிகேட்டால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply