செல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசிநாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன் படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அடுத்த கட்டமாக, 'பீம்' என்ற பெயரில், புதிய மொபைல் ஆப், பிரதமர், நரேந்திர மோடியால் நேற்று, அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. டில்லியில் நேற்று நடந்த, டிஜிட்டல் பரிவர்த்தனை விழாவில், இந்தஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்மூலம், வங்கி கணக்குடன் இணைக்க பட்டுள்ள ஆதார் எண் அடிப்படையில், கைவிரல்ரேகையை பதிவு செய்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.அதைத்தவிர, 'இ – வாலட்' எனப்படும், மின்னணு முறையில், பணப்பரிமாற்றம் செய்யவும், இந்த புதிய, 'ஆப்'பை பயன் படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆப் பதிவிறக்கம்செய்து, நம் மொபைல் எண்ணை பதிவுசெய்தால் போதும். நம் வங்கிக் கணக்கில் இருந்து, பணத்தை செலுத்துவதுடன், பணத்தையும் மிகசுலபமாக பெற முடியும்.

ஆதார் மூலமாக பரிவர்த்தனை செய்யக்கூடிய இந்த மொபைல் ஆப், என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பரிவர்த்தனை வாரியத்தால் வடிவமைக்கப் பட்டுள்ளது. தற்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பல்வேறு வங்கிகள் அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த பரிவர்த்தனை முறைகளுக்கும் பயன் படுத்தலாம்.

''சட்டமேதை அம்பேத்கரின் நினைவாக, இந்த ஆப்புக்கு, பீம் என்று பெயரிட்டுள்ளது,'' என,
பிரதமர், நரேந்திரமோடி தெரிவித்தார். இதன் அறிமுக விழாவில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், போஸ்டர்கள், வாசகங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்தவர்களுக்கு, பிரதமர் மோடி பரிசளித்தார். மேலும், மத்திய அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்துவோருக்கு பரிசு அளிக்கும் திட்டத்தின்படி, முதல் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட் டோருக்குபரிசுகள் வழங்கப் பட்டன.
 

விழிப்புணர்வு பிரசாரம்


டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், 100 நாட்களுக்கு, 100 நகரங்களில், விழிப்புணர்வு விழாக்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, அரசுக்கு, திட்டங்களுக்கான ஆலோசனைகளை வழங்கும், 'நிடி ஆயோக்' செய்துவருகிறது.

பீம் மொபைல் ஆப் அறிமுகவிழாவில், நிடி ஆயோக் தலைமை செயல்அதிகாரி, அமிதாப்காந்த் பேசுகையில், ''இன்னும் கொஞ்சம் காலம் தான்; இந்தியா டிஜிட்டல் மயமாகி விடும். டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பணக் காரர்களுக்கு மட்டுமே என்ற நிலைமாறி வருகிறது. இதன்மூலம், ரொக்கப்பரிவர்த்தனை குறைவதால், ஊழல், லஞ்சம் போன்றவை இல்லாத சமூகமாக நாம் மாறிவிடலாம்,'' என்றார்.

'டவுண்லோடு' செய்வது எப்படி?


மத்திய அரசால் அறிமுகம் செய்யப் பட்டுள்ள, 'பீம்' என்ற 'மொபைல் ஆப்'பை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கம்:
 

இந்த ஆப், ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐ.ஓ. எஸ்., எனப்படும் மென் பொருட்களில் இயங்கும் அனைத்து மொபைல்களிலும் பயன் படுத்தலாம்.

எங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்?


மொபைலில் உள்ள கூகுள்ஸ்டோர் என்ற செயலியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். https://play.google.com/stor/apps/details?id=in.org.npci.upiapp
 

எப்படி பயன் படுத்துவது?


கூகுள் ஸ்டோரில்,பீம் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்தபிறகு, அதில், வங்கிக்கணக்கு குறித்த விபரங்களை பதிவுசெய்ய வேண்டும். அதற்கான, ரகசிய குறியீட்டு எண்ணையும் பதிவுசெய்து கொள்ளலாம். அதன்பிறகு, நம் மொபைல் போன் எண்தான், பரிவர்த்தனைக்கான முகமாக அமையும். இவ்வாறு பதிவுசெய்த உடன், இந்த ஆப் பயன் படுத்தி, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை எப்படிநடக்கிறது?


இந்த இ – வாலட் வசதியைத் தவிர, ஆதார் எண் அடிப்படையில், வங்கி கணக்கில் பதிவு செய்துள்ள வர்களும், கை விரலை பதிவுசெய்து, பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதற்காக, வர்த்தகர்கள், தங்களுடைய மொபைலில், இந்த ஆப் பதிவிறக்கம் செய்வதுடன், கைவிரல் ரேகையை பதிவு செய்யக் கூடிய கருவியை வைத்திருக்கலாம். அதில், நுகர்வோர், தங்களுடைய கை விரலை பதிவுசெய்தால் போதும், நுகர்வோரின் மொபைலில் அதற்கான பரிவர்த்தனை செய்யலாம்.

கடைக்கு செல்லும்போது, ஆதார் அட்டையை எடுத்துசெல்ல வேண்டாம். மொபைல்போன் கையில் இல்லா விட்டாலும், பரிவர்த்தனையை செய்ய முடியும்.

பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு உள்ளதா?


பீம் ஆப் மூலம், அதிக பட்சம், ஒரு பரிவர்த்தனைக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஒருநாளில், 20 ஆயிரம் ரூபாய் வரையும் பயன் படுத்த முடியும்.
 

இந்த ஆப் பயன் படுத்தி, எப்படி பணத்தை அனுப்பவது, பெறுவது?


பீம் ஆப் பதிவிறக்கம் செய்து, அதில் நம்மொபைல் எண்ணை பதிவுசெய்த பிறகு, இதேபோல் பதிவு செய்துள்ள நண்பர்கள், உறவினர்கள், வாடிக்கை யாளர்களிடம் இருந்து, மொபைல் எண்ணை குறிப்பிட்டு பணத்தைபெறலாம், அனுப்பலாம்.
 

அனைத்து வங்கிகளுக்கும் இந்த வசதிஉள்ளதா?


பெரும்பாலான பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த ஆப் மூலம் பணத்தை அனுப்பலாம், பெறலாம்
 

எந்தெந்த மொழிகளில் உள்ளது?


தற்போது, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது; விரைவில் பல்வேறு மொழிகளில் வர உள்ளது.
 

எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு கடையில் பொருட்களை வாங்கியபின், அதற்கான பணத்தை, இந்த ஆப் வைத்துள்ள அந்த வர்த்தகருடைய மொபைல் எண்ணைப் பெற்று உடனடியாக அனுப்பலாம்.அந்த பணம், நம் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு, அவருடைய வங்கிக் கணக்கில் இருப்பு
வைக்கப்படும்.
 

இ – வாலட்களை விட எப்படி சிறந்தது?


தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான இ – வாலட்களில், நாம் பணத்தை முன்கூட்டியே, அதில் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால்,

இந்த பீம் ஆப்பில், அது தேவையில்லை. நம் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக பணம் எடுத்து கொள்ளப்படும்.

 


க்யூ.ஆர்., கோடு எனப்படும், குயிக்ரெஸ் பான்ஸ் கோடு மூலம், உடனடியாக பணத்தை பரிமாற்றம் செய்யும் குறியீட்டை, வர்த்தகர்கள் தாமாகவே உருவாக்கிகொள்ளும் வசதியும் உள்ளது. அதை, நம் போனில் இருந்து ஸ்கேன் செய்தால் போதும், பணத்தை அனுப்பிவிடலாம்.
 

 

சாதாரண போனில் பயன்படுத்த முடியுமா?


ஆன்ட்ராய்டு போன் இல்லா விட்டாலும், சாதாரண போனில் இருந்தும், இந்தவசதியை பயன்படுத்த முடியும். அதற்கு, உங்களுடைய போனில் இருந்து, *99# என்ற எண்ணை அழுத்தி னால், அதில் விபரங்கள் வரும். அதனடிப் படையில் பரிவர்த்தனை செய்யலாம். இதற்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை.
 

முக்கிய அம்சங்கள்


டிஜிட்டல் பரிவர்த்தனையின் அடுத்தகட்டமாக, 'பீம்' எனப் பெயரிடப்பட்டுள்ள, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள, 'மொபைல் ஆப்'பை, பிரதமர், நரேந்திர மோடி, டில்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.
 

இதன் சிறப்பம்சங்கள்:


* வங்கிகள், வழக்கமான கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால், பீம் மொபைல் ஆப் பயன்படுத்தும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.


* இந்த ஆப்பை, வர்த்தகர்கள், தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், 2,000 ரூபாய் மதிப்புள்ள, கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவியை வாங்கி கொள்ளலாம்.


* வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளவர்கள், இந்த ஆப்பை பதிவு செய்து கொள்ளலாம். வர்த்தக பயன்பாட்டுக் கான பரிவர்த்தனையின் போது கை விரல் ரேகையைப் பதிவு செய்தால் போதும், வங்கிக் கணக்கில் இருந்து வர்த்தகர்கணக்குக்கு பணம் சென்றுவிடும்.


* இந்த ஆப் மூலம் கார்டுகள், 'பாஸ்வேர்டு' எனப்படும் ரகசிய குறியீட்டு எண் போன்றவை தேவையில்லை. அதேபோல், மொபைலில் இன்டர்நெட் வசதியும் தேவையில்லை.


* நாடு முழுவதும், 100 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அதில், 40 கோடி ஆதார் எண்கள், ஏற்கனவே வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளன.


* இந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் அறிவிக்கப் பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு பரிசளிக்கும் திட்டத்தின் கீழ், பரிசுகள் வழங்கப் பட்டன.


* சட்டமேதை அம்பேத்கரின் நினைவாக, இந்த, 'ஆப்'க்கு, பீம் என பெயரிடப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply