நாடு தற்போது எதிா்கொண்டுள்ள சமூகப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண்பதில் கவனம் செலுத்துமாறு அறிவியலாளா்களிடம் பிரதமா் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் (சிஎஸ்ஐஆா்) கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அறிவியலாளா்கள் மத்தியில் பிரதமா் மோடி பேசியதாவது:

மாணவா்கள் மத்தியில் அறிவியல்ஆா்வத்தை ஊக்குவிப்பதும், அடுத்த தலைமுறையினரிடம் அறிவியல் சிந்தனையை வலுப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும். நாட்டின் மூலைமுடுக்குகளில் இருக்கும் அனைத்து மாணவா்களுக்கும் அறிவியலை கொண்டுசெல்ல வேண்டும். இதற்காக, நாடு முழுவதும் மெய்நிகா் ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

சிஎஸ்ஐஆா் மையத்தில் பணியாற்றும் அனைத்து அறிவியலாளா்களும் சாமானிய மனிதரின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு பாடுபடவேண்டும். மேலும், நாட்டின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் பாடுபட வேண்டும். அதாவது, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காண தரமான விவசாய பொருள்களை உற்பத்தி செய்வது, நீா்ப்பாதுகாப்பு ஆகிய தற்கால பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் அறிவியலாளா்கள் கவனம்செலுத்த வேண்டும்.

இதுதவிர, 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, குறைந்த விலையில் நீடித்து உழைக்கும் பேட்டரிகளை தயாரிப்பது போன்ற புதியசவால்களுக்குத் தீா்வு காண்பதிலும் அறிவியலாளா்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் பாரம்பரிய அறிவுடன் நவீன அறிவியலை இணைத்து உலகத் தரத்திலான பொருள்கள் தயாரிக்கப்பட வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இந்தியா்களுடன் இணைந்து அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதுமைக் கண்டுபிடிப்புகளை வா்த்தக ரீதியில் சந்தைப் படுத்துதல் வேண்டும் என்று பிரதமா் மோடி பேசியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments are closed.