புதிய 1,000, 100, 50 ரூபாய் நோட்டுகளையும் மத்தியஅரசு அறிமுகப்படுத்த இருப்பதாக பொருளாதார விவகாரங் களுக்கான துறைச்செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. தற்போது புதிய 2,000, 500 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொது மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால்நிலையங்களில் கொடுத்து மாற்றிவருகின்றனர். இன்னும் சிலமாதங்களில் புதிய 1,000, 100, 50 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக பொருளாதார விவகாரங்களுக்கான துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சக்தி காந்த தாஸ் கூறியதாவது: புதிய வடிவத்தில் புதிய வண்ணத்தில் இன்னும் சில மாதங்களில் ஆயிரம்ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். அனைத்து ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை இனி தேவைக்கு ஏற்ப மாற்ற திட்டமிட்டுள்ளோம். எனவே இன்னும் சிலமாதங்களில் புதிய வடிவங்களில் ரூபாய் நோட்டுகளை காணலாம். புதிதாக இன்று வெளியிடப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு எப்படி உள்ளது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மக்கள் பயன்படுத்தி ஆதரவுகொடுப்பதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.

உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்காது. 2 ஆயிரம் ரூபாய்நோட்டுகளின் அமைப்புக்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களில் மாற்றம் செய்யவேண்டும். அதன் பிறகே ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைக்கும். எனவே பொதுமக்கள் அதற்கு ஏற்ப முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

வெள்ளிக் கிழமை மதல் ஏடிஎம் எந்திரங்களில் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் பொது மக்கள் மிகக்குறைந்த பணத்தை ஏடிஎம் எந்திரங்களில் இருந்து எடுத்து கொள்ளமுடியும். பொதுமக்கள் ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு எந்தவிதகட்டணமும் இல்லாமல் இலவச சேவையை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Tags:

Leave a Reply