முன்னாள் முதலமைச்சர்  எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் நூறாவது ஆண்டு விழாவில் அவர் புகழ் மேலும் மேலும் ஓங்க அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன் .

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து,  வறுமையை துணையாகக் கொண்டு, வாழ்க்கையை துவங்கி ஒரு நேரம் ஒரு வயிறு கஞ்சி குடிக்க வேண்டும் என்றாலும், இவர் உழைத்தால் தான் உண்டு  என்கின்ற நிலையிலும் பள்ளிப் படிப்பை படிக்க வேண்டிய வயதில் நாடக வேடம் தரித்து இளம் வயதில் சினிமாவில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ,சின்னஞ் சிறு வேடங்களை கூட தட்டிக் கழிக்காமல் நடிப்பினை காட்டி நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு கதாநாயகன் வேடம் கிட்டிய போது, தான் பெற்ற செல்வத்தை தனக்கென சேர்த்துக் வைக்காமல் தன்னை நாடி வந்த சக நடிகர் நடிகையர்க்கும், ஏழை எளியவர்க்கும் வாரி வழங்கிய வள்ளல் என பேரெடுத்து தமிழ் கூறும் நல்லுலகின் திரைப்பட நாயகனாய் உயர்ந்து புரட்சி நடிகர் என்ற சிறப்பினை பெற்றவர்எம்.ஜி.இராமசந்திரன் அவரகள் .

தான் நடித்த திரைப்படங்களில் புகை பிடித்தல் , மது அருந்துதல் , களவு செய்தல், பெண் பித்தன் ஆதல் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எந்த ஒரு தன்மையையும் தன் கதாபாத்திரத்தில் ஏற்காது அதர்மத்திற்கு எதிராய் போராடி தர்மத்தை காக்கும் உயர்ந்த குணம் படைத்த நன் மனிதராய் நடித்து தமிழக மக்களின் குறிப்பாய் பெண்களின் அன்பிற்குப்பாத்திரமாய் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களை அவரது ஒவ்வொருரசிகர்களும்தங்கள் குடும்பத்தின் தலைவராய்மதிக்கப் பெற்றார்கள்.

எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் பெற்ற பெயரையும், புகழையும் திராவிட முன்னற்ற கழகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வசதியாக தான் நடித்த அனைத்து திரைப்படங்களில் வசனம் அல்லது காட்சி அல்லது பாடல் ஏதேனும் ஒன்றின் மூலம் தான் கொண்ட கொள்கையை  மக்கள் மத்தியில் கொண்டு சென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கு உரமாக நின்றவர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அக்கட்சியின் கணக்கு வழக்குகளில் தவறு செய்திருக்கிறது என்று உணர்ந்த போது அக்கட்சியில் கணக்கை காட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து, அது நடவாத போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற புதிய கட்சியை தோற்றுவித்து, புரட்சி நடிகராய் இருந்தவர் , புரட்சி தலைவராக உயர்ந்தார்.

திராவிடர்கழகம், திராவிடமுன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும்,  ஆன்மீகத்திற்கு எதிராகவும், தேசிய சிந்தனைக்கு எதிராகவும், ஜாதிய காழ்ப்புணர்ச்சியை தூண்டும் வகையில் செயல்பட்டு வந்த தன்மைக்கு மாற்றாக, அன்னை மூகாம்பிகையை தரிசிப்பதற்காக கொல்லூர் சென்று கழக அரசியலில் ஆன்மீகத்தை மலரச்செய்த பெருமை இந்த புரட்சித்தலைவரை மட்டுமே சேரும்.

தேசிய சிந்தனைக்கு மாற்றாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எக்காலத்திலும் உருவாகிடக்கூடாது என்று,  அது தன்னுடைய காலமாக இருந்தாலும்,  தன் காலத்திற்குப் பின்பாக இருந்தாலும், தன் கட்சியில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அ.தி.மு.க. என்று இருந்ததை அ.இ.அ தி.மு.க. என்றுபெயர் மாற்றி,தரம் உயர்த்தி, தான் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்று உறுதிபட காட்டியவர் தேசபக்தர் எம்.ஜி.ஆர்.

தனது ஆட்சியை முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு தமிழகத்தில் நிறுவிய போது, தன்னால்தான் அனைவரும் வெற்றி பெற்றார்கள் மற்றும் எம்.எல்.ஏ, அமைச்சர் ஆனார்கள் என்று நன்கு தெரிந்த பிறகும் கூட, தன்கட்சியை சார்ந்த எம்பி மற்றும் எம்.எல்.ஏக்களையும், அடி மட்டத் தொண்டர் முதல் அனைவரையும் மிகுந்த மரியாதையோடு நடத்திய மனிதாபிமானத்தின் வடிவமானவர்இந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

தனது ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை கூட்ட, பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டு வரப்பெற்ற மதிய உணவு திட்டத்தை அப்படியே ஏற்று, அதனை சத்துணவு திட்டமாக உருவாக்கி கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு வழங்கி படிக்க வைத்தவர் இந்த ஏழை பங்காளர். மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவன் உடல் நலம் இன்றி அயல் நாட்டில் சிகிச்சை பெற்றாலும், தமிழ் நாட்டில் அவரது பெயரும், புகழும் அவரது கட்சியை வெற்றி பெற வைக்க முடியும் என்று சரித்திரம் படைத்தவர், இந்த சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர்.

தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். இனி இவர் பிழைக்கவே முடியாது என்ற நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  போதும், இரண்டாவது முறையாக, உடல் நலம் குன்றி, சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்கா  சென்ற போதும், அவர் செய்த தர்மம் அவரை காத்தது.

கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் குடிகொண்ட இவர் பிழைக்க வேண்டும் என நம் மக்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை மீண்டும்பிழைக்க வைத்தது. இவ்வாறு, இரண்டு முறை எமதர்மனின் வீடு வரை சென்று திரும்பிய பெருமை இத்தர்மத்தலைவன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே உண்டு. 

திரு.எம்.ஜி.ஆரின் பேருக்கும், புகழுக்கும் ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், இந்திய அரசின் பாரத ரத்னா என்ற உயரிய விருதை பெற்ற மகத்தான தலைவர் என்ற பெருமையை கொண்டு விளங்கும் எம்.ஜி.ஆர்.அவர்களின் 100 ஆவது பிறந்த நாளில் அவர் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உணர்த்தி வைத்த ஆன்மீக உணர்வும், தேசபக்த உணர்வும், அணையாமல் காப்பது மட்டுமே எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், எம்.ஜி.ஆரை மதிக்கின்ற நம்மைப்போன்ற அனைவருக்கும் அவர் விட்டுச்சென்ற செய்தியாகும்.

அந்த உயர்ந்த இரு இலட்சியங்களை மனதில் ஏற்றி தமிழகத்தை தேசியத்தின் பக்கமும், தெய்வீகத்தின் பக்கமும் எடுத்துச்செல்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். அது ஒன்றே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுக்க வேண்டிய சபதம் ஆகும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மேலான இத்தனலமற்ற குணங்களை போற்றுகின்ற வகையில் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், திரு.எம்.ஜி. ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு தபால் தலை வெளியிட்டிருப்பதற்காக பாரத பிரதமர் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும், ஒட்டு மொத தமிழ் சமுதாயத்தின் சார்ப்பிலும், மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலைசாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன்

 

Leave a Reply