பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்  குறைக்க வேண்டும் என, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளனர். தினசரி விலை நிர்ணயமுறை அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துவந்தன. சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தீபாவளி சமயத்தில் பெட்ரோல்விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.  இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை லிட்டருக்கு ரூ.2 வீதம் குறைத்து மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இது நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.  இதன்படி நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.63 குறைந்து ரூ.70.85 ஆகவும், டீசல் ரூ.2.41 குறைந்து ரூ.59.89 ஆகவும் இருந்தது.

இந்நிலையில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:   பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசுகள் வாட்வரியை வசூலிக்கின்றன. இவற்றை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததுபோல மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க நுகர்வோர் நலன் கருதி பொறுப்பேற்க வேண்டும். இவற்றின்மீது விதிக்கப்படும் வாட் வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 3 நாள் பயணமாக  வங்கதேச தலைநகர் தாகாசென்றுள்ளார். அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்தபாதிப்பிலிருந்து வாடிக்கையாளர்கள் விடுபடும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட்வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும். வாட் வரி தவிர, பெட்ரோலிய பொருட்களில் இருந்து கிடைக்கும்வரி வருவாயில் பெரும் பகுதி மாநிலங்களுக்கு செல்கிறது. மத்திய அரசு வரிகளில் 42 சதவீதம் அவர்களுக்கு கிடைக்கிறது. எனவே இந்த சுமையை மாநிலங்களும் ஏற்கவேண்டும். எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், நுகர்வோரின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *