சென்னையில் நேற்று ஒரு கருத் தரங்கில் கலந்துகொள்ள மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வந்திருந்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல்விடுமுறை பற்றிய சர்ச்சை வேகமாக பரவிவருவது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

உடனே அவர் அந்தஇடத்தில் இருந்தபடியே பிரதமரின் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளரை செல்போனில் தொடர்புகொண்டு பேசி இதுகுறித்து விவரம் கேட்டறிந்தார்.

பின்னர், பொங்கல் விடுமுறை சர்ச்சைகுறித்து வெங்கையா நாயுடு விளக்கம் அளித்து கூறியதாவது:-பொதுவாக டெல்லிக்கு வெளியே உள்ள மத்திய அரசு நிர்வாக அலுவலகங்களுக்கு 17 நாட்கள் விடுமுறை நாட்களாக கடைப்பிடிக்கப் படுகிறது.

இதில் குடியரசுதினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்தநாள், புத்தபூர்ணிமா, கிறிஸ்துமஸ், தசரா (விஜயதசமி), தீபாவளி, பெரிய வெள்ளி, குருநானக் பிறந்தநாள், ரமலான், பக்ரீத், மகாவீர் ஜெயந்தி, முகரம், மிலாதுநபி ஆகிய 14 நாட்கள் கட்டாய விடு முறை நாட்கள் ஆகும்.

இந்த 14 நாட்கள் போக மீதமுள்ள 3 நாட்களை தசராவுக்கு கூடுதலாக ஒரு நாள், ஹோலி, கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ரதயாத்திரை, ஓணம், ஸ்ரீபஞ்சமி, விஷூ அல்லது உகாதி, வைசாகி போன்ற 12 நாட்களில் இருந்து மாநில தலை நகரங்களில் உள்ள மத்திய அரசாங்க ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

தேவைப்பட்டால் மற்ற மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைப்பு குழுவுடன் கலந்து ஆலோசித்தும் முடிவு எடுக்கலாம். அதன்படி, அந்தந்த மாநிலங்களில் மேலும் 3 நாட்கள் எந்தெந்த நாட்கள் விடுமுறை நாட்கள் என முடிவுசெய்யப்படும்.

இதுதவிர, வழக்கமாக உள்ளூரில் முக்கியத்துவம் தொடர்பான பண்டிகைகளை கருத்தில்கொண்டு விருப்ப விடுமுறை பட்டியலுக்காக மாநில தலை நகரங்களில் உள்ள ஒருங்கிணைப்பு குழுக்கள் 9 பண்டிகைகள் பட்டியலை தயாரிக்கும்.

மாநில தலைநகரங்களில் உள்ள இந்தமத்திய அரசாங்க ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழுவுக்கு, அந்தந்த மாநில அரசாங்கம் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கலந்து ஆலோசித்து ரமலான், முகரம், மிலாதுநபி போன்ற பண்டிகைகளின் தேதியை மாற்றுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 19-ந்தேதி வருகிறது. சில மாநிலங்களில் இந்த நாளுக்கு ஒருநாள் முன்பாக ‘நரகா சதுர்த்தசி நாள்’ என்று கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற இடங்களில் அந்த மாநிலம் அந்தநாளை கட்டாய விடுமுறை நாளாக அறிவிக்கும்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கும் கட்டாய விடுமுறை நாளாக அறிவிப்பதில் ஆட்சேபனை இல்லை.

மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் இதேபோல் ஒரு ஆண்டில் குடியரசு தினம், சுதந்திரதினம், மகாத்மா காந்தி பிறந்தநாள் ஆகிய 3 கட்டாய விடுமுறை நாட்களை சேர்த்து 16 நாட்கள் கட்டாய விடுமுறை நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களாக அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்யும்.

இந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதியே 2017-ம் ஆண்டில் மத்திய அரசாங்க அலுவலகங்களுக்கான விடு முறை நாட்கள் பட்டியலை மத்திய அரசாங்கத்தின் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பென்சன் அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள மத்திய அரசாங்க ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு 12 நாட்கள் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை தேர்ந்தெடுத்து அனுப்ப வில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பொங்கல்தினம், விடுமுறை நாளான 2-வது சனிக்கிழமையில் வருகிறது என்பதால் இப்படி தேர்ந்தெடுக்காமல் இருந்திருக்கலாம்.

மத்திய அரசாங்கத்துக்கோ, அதில்உள்ள பணியாளர் மற்றும் ஆணையத்துக்கோ தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு பொங்கலை கட்டாய விடுமுறை நாளாக அறிவிக்க தேர்ந்தெடுக்காமல் இருந்ததற்கு எந்தசம்பந்தமும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply