பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள ஆதார்விவரங்கள் வெளியே கசியவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புதன் கிழமை தெரிவித்தது.


மக்களவையில் உடனடிக்கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் எம்பி.ராஜேஷ் எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல், தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி பதிலளித்துப் பேசியதாவது:


மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து ஆதார்விவரங்கள் எதுவும் கசியவில்லை. மக்கள்தொகை பற்றிய விவரங்கள், மக்களின் பயோமெட்ரிக் விவரங்கள் ஆகியவற்றை மத்திய தகவல்-தொழில் நுட்ப அமைச்சகத்தில் இருந்து எந்த வழியிலும் கசியவிட முடியாது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார்விவரங்கள் வெளியே கசிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.அந்த விவகாரத்தில், தோனியின் ஆதார் விவரங்களைச் சேகரிப்பதற்கு அவரது வீட்டுக்குச்சென்ற பணியாளர், பயோ-மெட்ரிக் விவரங்களைப் பதிவுசெய்யும் காட்சியைப் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அங்கிருந்து தகவல்கள் வெளியேகசிந்திருந்தால், அதை ஆதார் ஆணையத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது.


இந்நாள் வரை, ஆதார் ஆணையத்திடம் இருந்து எந்தத்தகவலும் வெளியே கசியவில்லை என்றார் அவர்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், இந்த விவகாரத்தை எழுப்பிப்பேசுகையில், ''ஆதார் விவரங்கள் கசிந்துவருவது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். இதனால், ஆதார் விவரங்கள் பாதுகாப்பு குறித்த ஒட்டுமொத்த நம்பகத்தன்மையும் போய்விட்டது. ஆதார்விவரங்கள் வெளியே கசிவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு விளக்க வேண்டும்'' என்றார்.

Leave a Reply