பொதுஇடங்களில், குப்பை போட்டாலோ, சிறுநீர், மலம் கழித்தாலோ, அபராதம் விதிக்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'துாய்மை இந்தியா' பிரசார திட்டத்தை, தீவிரமாக அமல்படுத்திவருகிறது.


இதுதொடர்பாக, அனைத்து மாநில அரசுகளின் செயலர்களுக்கும், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பொது இடங்களில் குப்பைபோடுதல், சிறுநீர், மலம் கழித்தல் போன்றவற்றை தடுக்கும்வகையில், அபராதம் விதித்து, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஏப்., 30க்குள், ஒவ்வொரு நகரிலும், குறைந்த பட்சம் ஒரு வார்டிலாவது, இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நடப்பாண்டு இறுதிக்குள், ஒவ்வொரு மாநிலமும், 10 முதல் 15 நகரங்களில், அனைத்து வார்டுகளிலும், அபராதம்விதிக்கும் திட்டத்தை துவக்க வேண்டும். 2018, செப்., 30க்குள், எல்லா நகரங்களிலும், அனைத்து வார்டுகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்டகாலத்துக்குள், அபராத திட்டம் நிறைவேற்றப்படும் பகுதிகளில், வீட்டுக்குவீடு சென்று, குப்பைகளை சேகரித்தல், போதிய அளவு, பொதுகழிப்பறைகள் அமைத்தல் போன்ற வசதிகளை, மாநில அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


குப்பைபோடுதல், சிறுநீர், மலம் கழித்தல் போன்ற குற்றங்களுக்கு, மத்திய அரசு அறிவுரைப்படி, 200 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படலாம் என தெரிகிறது.

Leave a Reply