நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி 7- 7.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  என்பது வரும் நிதி ஆண்டில் சவாலான விஷயமாக இருக்கும்’ என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி பொருளாதார ஆய்வு  அறிக்கையில் கூறியுள்ளார்.  இம்மாதம் 29 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக பொருளாதார சர்வே ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த வகையில் 2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான பொருளாதார நிலவரம் குறித்த சர்வே தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:  உள் நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி மதிப்பிடப்பட்டதை விட குறைவாக இருந்த போதும், சவால்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.9 சதவீதம் சாத்தியமான ஒன்றுதான்.   2014-15ல் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் 7.6 சதவீதமாக இருக்கும்.

 உலகளவில் பொருளாதாரம் பலவீனமாக இருந்தால், அதனால் சில பாதிப்புகள் இருக்கும்.  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு பருவமழை நன்கு இருக்கும் வேளாண் உற்பத்தியும் நன்கு இருக்கும். ஊதிய உயர்வு காரணமாக அரசு ஊழியர்கள் அதிகளவில் செலவழிப்பார்கள். பண புழக்கம் அதிகரிக்கும்.
  எதிர்வரும் சிக்கல்கள்: அதே நேரம் சில சிக்கல்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.  உலக நாடுகளில் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதால் நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.  சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும்  மாற்றங்களால் உறுதியற்ற தன்மை நிலவும். குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறலாம். இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டுமே பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும்.     

தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள், சில பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகள் காரணமாக பங்குச் சந்தையில் சறுக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.  நாடு எதிர்கொள்ள வேண்டிய இந்த இரு குறுகிய சவால்கள் காரணமாக, தனியார் முதலீடு மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படலாம்.  வேளாண் பாதிப்பு: வீரியமுள்ள உயர் ரக ஹைபிரிட் விதைகள்,  மரபணு  மாற்றம் செய்யப்பட்ட விதைகள், விளைபொருள்களுக்கான சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை, பொருள்களை விற்க தேசிய அளவில் விற்பனை வசதிகள் போன்றவற்றால் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் இத்துறையில் பெருத்த மாற்றம் ஏற்படும். மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அவை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்த 6 மாதங்களில் இதை நாம் நாட்டில் அறிமுகப்படுத்த முடியும்.

 மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் மூலம் கிடைக்கும் விளைபொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒழுங்கு முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஹைபிரிட் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் விலை விவசாயிகள் வாங்கும் நிலையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். இவற்றின் விளைச்சல் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் நீதிச் சார்ந்த பிரச்னைகள், உணவு சங்கிலியில் ஏற்படுத்தும் மாற்றங்கள், நோய் தொற்று, அயல் மகரந்த சேர்க்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.  வீரியமுள்ள விதைகள், அதிக விளைச்சலை தரும் விதைகள் இவற்றால்தான் வேளாண் மகசூலை நாம் அதிகரிக்க முடியும்.   

இடுபொருள் உற்பத்தி: எண்ணெய் வித்துகள், பருப்புகளின் உற்பத்தியை அதிகரிக்க போதிய ஊக்கமளிக்க கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.  இவ்விரண்டையும் உள்நாட்டு தேவைக்காக நாம் இப்போது அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறோம்.  அதிவேகமாக நடைபெற்றும் தொழிற்–்சாலைகள் மயமாக்கம், வெப்பநிலை மாற்றங்கள் போன்ற காரணங்களால் போதிய விளை நிலங்கள் கிடைக்காமை, நீர்பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாதார சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply