அடுத்த ஆண்டு மே மாதம் நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக களமிறங்கி யுள்ளது. கடந்த தேர்தலில் புதியமுயற்சியாக சமூக இணையதளங்கள் மூலமாக பாஜக தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டது. அதேபோல், வரும் தேர்தலிலும் பாஜகவின் தேர்தல் ஆய்வுப் பிரிவின் சார்பில் ஒருநவீன உத்தியை கையாள அதன் தலைமைக்கு யோசனை கூறப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் மூலம் பலனடைந்தோர் எண்ணிக்கை சுமார் 30 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, இந்தப்பயனாளிகளை நேரில் சந்தித்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோர கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், பாஜகவுக்கு அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, வாக்களிக்க உறுதியேற்றவர்கள், வரும் குடியரசு தினத்தன்று, தங்கள் வீட்டு வாசல்களில் தாமரை வடிவிலான விளக்குகளை ஏற்றி வைப்பர் எனக்கூறப்படுகிறது. இந்தப் புதிய பிரச்சாரத் திட்டத்தை உத்தர பிரதேசத்திலிருந்து தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இது குறித்து, ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் சுமார் 15 கோடிபேர் மத்திய அரசின் திட்டங்களால் பலனடைந்துள்ளனர். இவர்களில் சுமார் 3 கோடிபேர் விலாசங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் நேரில்சென்று வாக்கு சேகரிக்க அமைக்கப்படும் வாக்குச்சாவடிக் குழுக்களில், மத்திய அமைச்சர்களும் இடம்பெறவுள்ளனர் என தெரிவித்தனர்.

இந்த நேரடி பிரச்சாரத்துக்கு ‘கமல் ஜோதி விகாஸ் அபியான்’ (தாமரை ஜோதி வளர்ச்சித் திட்டம்)’ என பெயரிடப்பட உள்ளது. மேலும், இதனை தொலைகாட்சி, வானொலி மற்றும் சமூக இணைய தளங்களில் வெளியிடவும் திட்டமிடப் பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

 

Leave a Reply