காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அம்மாநில பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவித்துள்ளார். இதனால், காஷ்மீரில் நடந்துவரும் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழும்நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்  முஃப்திமுகமது சயீத் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் மரணம் அடைந்ததை அடுத்து, கடந்த  2016-ம் ஆண்டு  மெஹபூபா முஃப்தி முதல்வராக தேர்ந்தெடுக்க பட்டார். இரண்டு ஆண்டுகள் கடந்தநிலையில், மெஹபூபா முஃப்தி அரசுக்கு, அளித்த ஆதரவைத் திரும்பபெறுவதாகப் பா.ஜ.க இன்று திடீரென அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காஷ்மீர் மாநிலப் பாஜக பொறுப்பாளர் ராம்மாதவ், `காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவே, மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், காஷ்மீரில் அண்மைக் காலமாகப் பயங்கரவாதம், பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட பலஅசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், இருகட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள்ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியைப் பா.ஜ.க வாபஸ் பெறுகிறது' என்று கூறினார்.

Leave a Reply