மத்திய அரசின் மக்கள்மருந்தகம் திட்டத்தினால், சாமானிய மக்களின் பணம் ரூ.1,000 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மக்கள் மருந்தக உரிமையாளர்களுடனும், மருந்தகங்கள் மூலம் பலனடைந்தவர்களுடனும் பிரதமர் மோடி, காணொலி முறையில் வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:

மக்கள் மருந்தகம் திட்டத்தின் மூலம் மக்களுக்கு குறைந்தவிலையில் தரமான மருந்துகளை அரசு வழங்கிவருகிறது. இதை உறுதி செய்வதற்காக, இரண்டு முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

முதலாவதாக, 850 அத்தியாவசிய மருந்துபொருள்களின் விலை குறைக்கப்பட்டது. அத்துடன் இதயவால்வுகளில் பொருத்தப்படும் ஸ்டென்ட் சாதனம், மூட்டு அறுவைச் சிகிச்சைக்கான சாதனம் ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டது. இரண்டாவதாக, நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இவ்விரு நடவடிக்கைகளால், ஏழைமக்கள் மட்டுமன்றி, நடுத்தர வர்க்கத்தினரும் பெரிதும் பலனடைந்துள்ளனர்.

மக்கள் மருந்தகம் திட்டத்தை அமல்படுத்தியதால் மட்டும், லட்சக் கணக்கான குடும்பங்களுக்கு ரூ.1,000 கோடிவரை மிச்சமாகியுள்ளது. அதுவும், மக்கள் மருந்தகம் பற்றி அதிகளவில் விளம்பரப்படுத்தாத நிலையிலேயே இந்த அளவு தொகை சேமிக்கப்பட்டுள்ளது. இதுவொரு தொடக்கம்தான்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடுமுழுவதும் 5,000-க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், தரமான மருந்துகள் கிடைப்பது மட்டுமன்றி, பலருக்கு வேலை வாய்ப்பும், சுயதொழில் தொடங்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

மக்கள் மருந்தகங்களில், வெளிச்சந்தை விலையை விட 50 முதல் 90 சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கின்றன.
அடிப்படை மூலக்கூறு மருந்துகளின் பயன் பாட்டை ஊக்குவிக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், டிசம்பர் 7-ஆம் தேதி, மக்கள் மருந்தக தினமாக கடைப்பிடிக்கப்படும்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த 2008 முதல் 2014-ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 80 மருந்தகங்களை மட்டுமே திறந்தது. ஆனால்,  எனது தலைமையிலான அரசு, 5,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்களை திறந்துள்ளது. இது தான், அடையாள அணுகுமுறை கொண்ட அரசுக்கும் (காங்கிரஸ்), முழுமையான அணுகுமுறை கொண்ட அரசுக்கும் (பாஜக) உள்ள வித்தியாசம்.

கடந்த 65 ஆண்டுகளில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப் பட்டும், கட்டுமானப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன. மருத்துவத்துறையில் புதிதாக, 31,000 எம்.பி.பி.எஸ். மற்றும் பட்ட மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன என்றார் அவர்.

பயனாளிகள் மகிழ்ச்சி: கலந்துரையாடலின் போது, மக்கள் மருந்தகங்களில் தரமான மருந்துகள் கிடைப்பதாக மோடியிடம் பயனாளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Leave a Reply