"ஈவெராமசாமி பெரியார் மதம் இல்லை என்று சொல்லி வயிறு வளர்த்தவர்! மூட நம்பிக்கையை வளர்த்தவர்!" என பி.ஜெய்னுலாபிதீன் கூறியதற்கு, ஈவெராமசாமியின் பெயரை சொல்லி கொண்டு திரியும் திராவிடர் கழகத்தின் பெருந்தலைகள் யாருமே வாய் திறக்கவில்லையே என உண்மையான ஈவெராமசாமி விசுவாசிகள் பலர் கேட்கிறார்கள். கி.வீரமணியிலிருந்து, கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியனின் யோக்கியதையை அறிந்தவர்கள் இப்படியொரு கேள்வியே கேட்க மாட்டார்கள். அதே நேரம் ஈவெராமசாமியோடு நெருங்கி பழகியவர்கள் – பி.ஜெய்னுலாபிதீனின் கூற்று, ஓரளவுக்கு உண்மையே என்பதை மறுக்க மாட்டார்கள்.. அதற்கான ஆதார பேச்சுக்களை இறுதியில் பார்ப்போம்.

பல்வேறு பெயர்களில் இயங்கும் திராவிடர் கழகத்தவர்கள், குண்டு வைப்பவனை மட்டுமா மதம் பார்த்து கண்டித்தனர். தங்களை விமர்சிப்பவனையும் கூட பார்ப்பனர்களா, பார்ப்பனர ல்லாதவர்களா… இந்துக்களா, சிறுபான்மை சமூகத்தினரா என்று பார்த்து பார்த்து, பயந்து பயந்து கண்டிக்கிறவர்களாக இருக்கையில் – பி.ஜெய்னுலாபிதீனை மட்டும் நேர்மையாக கண்டிக்க போகிறார்கள். பி.ஜெய்னுலாபிதீன் ஏழெட்டு வருஷங்களுக்கு முன் பேசியது, எழுதியது. அது – இந்த ஈவெராவாதிகளுக்கு போய் சேரவே இத்தனை வருசமாகி இருக்கிறது. இவர்களாவது கண்டிப்பதாவது. இந்த ஈவெராவாதிகளின் பகுத்தறிவு யோக்கியதை எத்தகையது என்பதற்கு சிறு உதாரணம்.

நாத்திகர்(ஈவெராவாதி)களும், இஸ்லாமியர்களும் கலந்து கொண்ட விவாதத்தில் – ஈவெராவாதிகள் இஸ்லாத்தை பற்றி பேசாமல், "சிலுவையில் இயேசு வவ்வாலை போல் தொங்கினார்" என்று பேசினார்கள். ஈவெராவாதிகள் போனதோ முஸ்லீம்கள் அழைத்த கூட்டத்தில். போய் பகுத்தறிவு காட்டியதோ கிறிஸ்தவம் பற்றி.. என்ன ஒரு அறிவு நாணயம். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் தானே இளிச்சவாயர்கள் என்பதால். இத்தகையவர்கள் எப்படி பி.ஜெய்னுலாபிதீனிடம் தைரியமாக பகுத்தறிவை காட்டுவார்கள்.. இஸ்லாமிய பயங்கரவாதத்தால், தங்கள் திராவிடர் இயக்க தொண்டர் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டதையே பயந்து பயந்து கண்டித்தவர்கள் தானே வீரமணியும், கொளத்தூர் மணியும்.

"மதம் இல்லை என்று சொல்லி வயிறு வளர்த்தவர் ஈவெராமசாமி பெரியார்" என்று மட்டுமா பி.ஜெய்னுலாபிதீன் கூறினார். இதையும் தான் சொன்னார் onlinepj.காம்லிருந்து. "பெரியாரின் பெயரால் திடலை அமைத்து அதில் மண்டபமும் அமைத்து அதை வாடகைக்கு விட்டு பொருளீட்டி வருகிறார்கள் விரமணி வகையறாக்கள். இவர்கள் எதை எதிர்ப்பதாக கூறி கொள்கிறார்களோ அந்த மதங்களின் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டு மதக் கருத்தை பரப்ப துணை நிற்கிறார்களே. இதில் வியாபாரம் – அதுவும் நெறி தவறிய வியாபாரம் தான் உள்ளதே தவிர பகுத்தறிவு ஏதும் இல்லை. நாம் கூட பெரியார் திடலில் நிகழ்ச்சிகள் நடத்தி இஸ்லாத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்திருக்கிறோம். எதை தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை ஒழிப்பதில் தான் பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளது.

காசு வருகிறது என்பதற்காக நாம் எதிர்க்கும் காரியத்தையே நமது இடத்தில் நடத்தி கொள்ள அனுமதிப்பது மானம் கெட்ட செயலே தவிர சுயமரியாதைக்கு உகந்த செயல் அல்ல. விபச்சாரம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் எனது வீட்டில் வந்து அதை செய்து கொள் என்று கூறினால் அவன் சுயமரியாதை உள்ளவனா?" ஈவெராவாதிகள் நாக்கை புடுங்கி கொள்வதுபோல் கேட்கப்பட்ட, இந்த கேள்விக்கு என்ன பதில் உள்ளது ஈவெராவாதிகளிடம்.. "பணம் சம்பாதிப்பது தானய்யா உங்கள் நோக்கம்" என்றால், என்ன சொல்வார்கள் "இறை நம்பிக்கையாளர்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். அதனால் நாங்கள் எங்கள் இடத்தை அவர்களுக்கு அனுமதிக்கிறோம்" என்று நொண்டி சாக்கு சொல்வார்கள். "கடவுளை பரப்புபவன் அயோக்கியன், காட்டுமிராண்டி என சொல்லிவிட்டு, அதை பரப்ப உன் இடத்தையே அனுமதித்தால் "நீங்கள் தானே முதல் அயோக்கியன், முட்டாள்".

"மதம் இல்லை என்று சொல்லி வயிறு வளர்த்தவர்!" என்கிற பி.ஜெய்னுலாபிதீன் பேச்சுக்கு ஈவெராவாதிகள் என்ன கதை சொல்கிறார்கள் என்றால், "ஈவெராமசாமி – அன்றைய தமிழகத்தின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர்" என்று. அது உண்மையா? அத்தகைய பணக்கார ஈவெராமசாமி ஏன் இப்படி பிச்சை எடுத்தார். ஈவெராமசாமி, 'எங்கள் பாடு' என்கிற தலைப்பில் – தாங்கள் நன்கொடை பெறபட்ட பாட்டை விவரிக்கிறார். "இந்தச் சிறு தொகைக்கு நானும், தோழர் பாண்டியன், நாயகம், ராமசாமி, வாலகுருவா ரெட்டியார் ஆகியவர்கள் இரண்டு தடவை இந்த ஊருக்கு வந்து விட்டோம். வந்து எவ்வளவு கஷ்டப்பட்டோம். எங்களால் தோழர் ஈஸ்வரப் பிள்ளைவாளுக்கும் எவ்வளவு கஷ்டம். முன் தடவை வந்திருந்தபோது நாங்கள் பட்டபாட்டிற்கு அளவில்லை.
நாங்கள் வந்த நாள் பகலில் 3 மணிக்குச் சாப்பிட்டோம். பஸ்ஸில் பகல் பிரயாணத்தில் 3,4 மணி நேரம் வெயிலில் அவஸ்த்தைப்பட்டோம். இராத்திரி பட்டினி கிடந்தோம்."என்று நீண்ட கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார் – குடி அரசு 7.6.1936,

இப்படியெல்லாம் ஒருவனிடம் நன்கொடை பெறுகிறார்கள்.. அப்படி நன்கொடை கொடுத்தவன் – பின்னாளில் ஒரு அயோக்கியதனம் செய்தால் கண்டிப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள். அதையும்
நாம் சொல்லவில்லை. "மனச்சான்றுக்கு மாறாகப் போகாமை" என்கிற தலைப்பில் அண்ணாவின் மகன் அண்ணா பரிமளம் எழுதிய கட்டுரை சொல்கிறது..
1941-ஆம் ஆண்டில், இராசா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மிகப் பெருஞ்செலவில், மிக ஆடம்பரமான முறையில் செட்டி நாட்டிலும், அண்ணாமலை நகரிலும் கொண்டாடப்பட்டது. தான தருமங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்க்கே வழங்கப்பட்டன. அறுபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிகுறியாக பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது அடுக்கு, வீட்டு சாமான்கள், அறுபது அம்மி ஆட்டுக்கற்கள், அறுபது பசுமாடுகள் போன்றவற்றை இராசா சர் தானமாக வழங்கினார்.

அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் விடுதலை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு நம்பிக்கையான மூடப்பழக்க வழக்கத்தைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதுவது என்று அண்ணா அவர்கள் எண்ணினார்கள். இந்த எண்ணத்தைப் பெரியார் அவர்களிடம் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களுக்கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியாரிடத்தில் மிக்க சினம் பொங்கி எழுந்திருந்தது. இராசா சர் அறுபாதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு மிக நிதி வழங்கியிருந்தார். விடுதலைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை. இது பெரியாருக்கு மிக்க சினத்தை மூட்டியது. யார் யாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறான். பார்ப்பனர்களுக்கு இலட்சம் இலட்சமாக அள்ளித் தருகிறான். அவனை ஓயாமல் திட்டிக்கொண்டிருக்கிற தேசீயப் பத்திரிகைகளுக்கு நன்கொடை தந்திருக்கிறான்.

நாம் ஒரு பத்திரிகை வைத்து நடத்துகிறோம். தேவையானபொழுதெல்லாம் அவனுக்கு ஆதரவு தருகிறோம். அப்படி இருந்தாலும், நமது பத்திரிகையைக் கவனிக்காமல் இருக்கிறான் என்றால் என்ன நியாயம்? அவனது அடிமைத்தனத்தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும் கருத்துப்பட பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள். அண்ணா அவர்களும் அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் ஒன்று தீட்டினார்கள். தலையங்கம் தீட்டி அச்சேற்றுவதற்குள், எதிர்பாராதவிதமாக இராசா சர் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து விடுதலைக்கு என்று ரூ.1000 நன்கொடை செக் வந்து சேர்ந்தது. செக்கை எடுத்துக்கொண்டு பெரியார் அவர்கள் அண்ணாவிடம் வந்து பைத்தியக்காரன் இப்பொழுது ரூ.1000-க்குச் செக் அனுப்பியிருக்கிறான். கண்டித்துச் தலையங்கம் தீட்டிவிட்டீர்களா? என்று கேட்டார். முன்பே எழுதிக்கொடுத்துவிட்டேன். அச்செறும் நிலையில் இருக்கிறது என்று அண்ணா கூறினார்கள்.

அவனைச் சாதாரணமாகப் பாராட்டி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள். அண்ணா அவர்கள் அவரது போக்கைக் கண்டித்து நான் எழுதிவிட்டேன். பாராட்டி எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள்; நான் எழுதமாட்டேன் என்று உறுதியாக விடையிறுத்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணா அவர்கள் பாராட்டி எழுத மறுத்துவிட்டார்கள். பிறகு அண்ணாவின் தலையங்கத்தை நிறுத்திவிட்டுப் பெரியாரே ஒன்று எழுதி வெளியிட்டார்கள். மனச்சான்றுக்கு மாறாக போகக்கூடாது என்பதிலே அண்ணா அவர்கள் எவ்வளவு அழுத்தமாக இருந்து வருகிறார்கள் என்பதற்கு, இது சீரியதொரு எடுத்துக்காட்டாகும். (மன்றம்: 15.06.1956)

அண்ணா பரிமளம் பொய் சொல்கிறார் என சொல்வார்களா? அப்படியும் சொல்ல முடியாதே. பல நேரங்களில் அண்ணா பரிமளம் கூறியதை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக போட்டவர்கள் தானே திராவிடர் கழக பெருந்தலைகள். அதனால், எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கும் திராவிடர் கழக பெருந்தலைகள் வாய் திறக்குமா.. எப்படி திறக்கும்.. அது தான் பி.ஜெய்னுலாபிதீன் விஷயத்தில் இறுக மூடி கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.