முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மதுவிலக்கு குறித்த முதல் கையெழுத்து வரவேற்கத் தக்கது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

தமிழக பாஜக. மாவட்ட தலைவர்கள் ஆலோசனைகூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மூத்ததலைவர் இல.கணேசன், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ், தேசிய இணை அமைப்பு செயலாளர் சந்தோஷ், தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெற்றவாக்கு சதவீதம், எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு வாக்குகள் பெறப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம் என்ன? இனிவரும் காலங்களில் தேர்தலில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு என்ன செய்யவேண்டும்? என்பது உள்பட பல்வேறு அரசியல் காரணிகள் அலசி ஆராயப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா, படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக கூறினார். முதல்முதலாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கும், மதுக் கடைகளின் நேரத்தை 10 மணி நேரமாக குறைத்தும் கையெழுத்து போட்டுள்ளார். இது வரவேற்கவேண்டிய ஒன்று. இதனை 8 மணி நேரத்திற்கும் குறைவாக ஆக்கியிருக்கலாம். இருந்தாலும் இது பாராட்டுக் குரியது.

பயிர் கடன்களை ரத்துசெய்து இருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது தமிழக அரசு வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும். மின் உற்பத்தியை அதிகரிப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற் சாலைகளை கொண்டு வருவது போன்ற பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply