மத்திய அரசு அதிகாரிகளின் பணியின் செயல் திறன் குறித்து தரநிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ராணுவ அமைச்சகத்தின் நிதிப்பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களுக்கான பயிற்சிமுகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
எந்த ஒரு குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நிறுவனத்துக்கும் அல்லது நாட்டுக்கும் நிதி என்பது முதுகெலும்பாக உள்ளது. ஒவ்வொரு அமைச்சகமும் சிறப்பாகசெயல்பட நிதி முக்கியம். அவற்றை நிர்வகிப்பதிலும் திறமையும் நேர்மையும் முக்கியமானது. இதற்காக பொதுநிதி நிர்வாக அமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்திவருகிறது.
நிதி நிர்வாகம் சிறப்பாக செயல்படவும் நேர்மையுடன் வெளிப்படையாக இருக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மத்திய அரசு அதிகாரிகளின் பணியின் செயல்திறன் குறித்து தர நிர்ணயம் செய்யப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குறைந்த பட்ச அரசு நடைமுறை, அதிகபட்ச நிர்வாகத் திறன் என்ற அரசின் நோக்கத்தின் கீழ் அதிகாரிகளின் செயல் திறன் பற்றி தர நிர்ணயம் செய்யப்படும். நிர்வாக நடைமுறைகள் விரைவில் செயல்பட வேண்டும் என்பதும் அதன் மூலம் மக்களுக்கு விரைவில் பலன் கிடைக்கவேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.