தமிழகத்தில் உள்ள அண்ணா, சென்னை, கோவை வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்பட பலவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிகிறது.

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக் கழகம், என 21  பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் தனியார் பல்கலைக் கழகங்கள், தன்னாட்சிபெற்ற பல்கலைக் கழகங்களும், பிரசிடென்சி காலேஜ்,  ராணி மேரி கல்லூரிபோல தன்னாட்சி பெற்ற கல்லூரிகளும் தமிழகத்தில் பல இடங்களில் இயங்கிவருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை ஒரே தலைமையின்  கீழ் கொண்டு வரவு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் இயங்கிவரும் அனைத்து அடிப்படை வசதிகளை கொண்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை தங்கள்  கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.


இதன்படி தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், கோவை வேளாண் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பெரியளவிலான பல்கலைக் கழகங்கள், சென்னை மாகாண கல்லூரி, ராணிமேரி கல்லூரி  போன்ற பெரிய நிலப்பரப்பில் உள்ள கல்லூரிகள் போன்று தமிழகத்தில் எங்கு இருந்தாலும் அவை மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குள் வரப் போகின்றன.

இதற்கான, ஆயத்தப் பணிகளை மத்திய அரசு எடுத்துள்ளது.இதற்கு பல்கலை கழக, கல்லூரி ஆசிரியர்கள் ஊழியர்கள் எதிர்ப்புதெரிவித்தும் பயன் இல்லை. இந்நிலையில் மேற்கண்ட பல்கலைக்கழக,  கல்லூரிகளின் சொத்து விவரங்கள், நிதி ஆதாரங்கள், கட்டிடங்கள் மதிப்பு உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கு வதற்கான பணிகள்  நடக்கிறது.

வரும் ஜூன் மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டபிறகு மேற்கண்ட பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மத்திய அரசின்  கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்.மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்கு சென்ற பிறகு பல்கலைக் கழகங்களில் இனிமேல் முதுநிலை பட்டப் படிப்புகள், ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் மட்டுமே  நடத்தப்படும். இளநிலை, டிப்ளமோபோன்ற படிப்புகளை பல்கலைக் கழகங்கள் நடத்தாது.கல்லூரிகளில் மட்டுமே இளநிலை, டிப்ளமோ படிப்புகள் நடக்கும். அல்லது பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புகளையும் கல்லூரிகளே நடத்தும் வகையில்  அனுமதி வழங்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.