மாயமான ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவரை  சிறப்புக்குழு அமைத்து போலீஸ் தேடவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
டெல்லியில் உள்ள பிரபல  ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கிபடித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த நஜீப் அகமது என்பவரை கடந்த 15-ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து காணாமல்போன நஜீப் அகமதுவை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி மாணவர்கள் நேற்று முதல் பல்கலைக்கழக வளாகத்தில் விடிய விடிய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200 க்கும் மேற்பட்டமாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக துணைவேந்தரையும் மாணவர்கள் இரவு முழுக்க சிறைபிடித்தனர். அவருடன் கல்லூரி நிர்வாகிகள் 12 பேரும் நேற்று இரவில் இருந்து பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். 
 
இந்த நிலையில், மாயமான மாணவரை போலீஸ் சிறப்புக் குழு அமைத்து  தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று டெல்லி போலிசுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 20 மணி நேரத்திற்குபிறகு துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் வெளியேற மாணவர்கள் அனுமதித்தனர். 
 
மாணவர் மாயமான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டை துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் மறுத்தார். மாணவர் மாயமானது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்ட தாகவும் பல்கலைக் கழக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 
 
மேலும், மாணவர் மாயமான விவகாரத்தில் பல்கலைக் கழகம் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து மாணவர்கள் மத்தியில் பல கட்ட கூட்டங்கள் நடத்தி எடுத்துரைக்கப் பட்டதாகவும் இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே மாயமானமாணவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. 

Tags:

Leave a Reply