திருவனந்த புரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தசம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது மாநில பா.ஜனதா தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க., மாநிலக்கமிட்டி அலுவலகம் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள குன்னுகுழி பகுதியில் இயங்கிவருகிறது. இங்கு நேற்று அதிகாலையில் வந்த ஒரு கும்பல், அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிஓடியது. இதில் அலுவலக கட்டிடத்தின் கதவு கண்ணாடிகள் உடைந்தன.

இந்தசம்பவத்தின் போது பா.ஜ.க தொண்டர்கள் சிலர் அலுவலகத்தின் மேல்தளத்தில் இருந்தனர். எனினும் குண்டு வீச்சில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சம்பவம் நடப்பதற்கு சிலநிமிடங்களுக்கு முன்னர்தான் மாநில பா.ஜனதா தலைவர் கும்மணம் ராஜசேகரன் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள பா.ஜனதா, இதுதொடர்பாக மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) கருப்பு தினம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலையில் தலைமைசெயலகம் நோக்கி பா.ஜனதா தொண்டர்கள் பேரணியும் நடத்தினர்.

இந்தசம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மீது மாநில பா.ஜனதா தலைவர் கும்மணம் ராஜசேகரன் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது:–

ஒருகட்சியின் மாநில கமிட்டி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தவறிய ஒரே முதல் மந்திரி பினராயி விஜயன்தான். இந்த தாக்குதல் தொடர்பாக அரசுசார்பில் கண்டனம்கூட தெரிவிக்கவில்லை.

மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மாநில கவர்னரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

வெடிகுண்டு மற்றும் கத்திகள் மூலம் தாக்குதல் நடத்து வதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியால் ஒரு போதும் பா.ஜ., அழிக்க முடியாது. பா.ஜனதாவின் சுய பாதுகாப்புக்கு மாற்றுவழிகள் எதுவும் இல்லை யென்றால், நாங்களும் பழிக்குப்பழி வாங்க வேண்டியிருக்கும் இவ்வாறு கும்மணம் ராஜசேகரன் கூறினார்.

Leave a Reply